என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
எதிர்பார்ப்புகள்-அச்சங்கள்!... அமெரிக்க அதிபராய் மீண்டும் டிரம்ப்
- ஒரு சில நாடுகள் மட்டுமே தனித்து நிற்கும் வல்லமை கொண்டவை.
- பிற நாடுகளுடன் அமெரிக்கா கொண்டிருந்த வர்த்தக உறவால், அவ்வந்த நாட்டுக்குதத் தான் பெரும் பயன் கிடைத்தது
இதோ... ஜனவரி 20 மதியம், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராய் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.
தொடர்ந்து அல்ல; 2020 தேர்தலில் தோற்று, நான்கு ஆண்டுகள் 'வெளியே' இருந்து விட்டு இப்போது மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறார்.
இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் அவர் ஏதும் மாறி இருக்கிறாரா? அவரது அரசியல், கோட்பாடு, அணுகுமுறை, குணநலன் எதுவும் மாறி இருக்கிறதா...?
அப்படி எதுவும் தென்படவில்லை. அதாவது மீண்டும் 'அதே' டிரம்ப்! உலக நாடுகளுக்கு இதுதான் அச்சம் ஊட்டுகிறது; அதே அளவுக்கு எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது!
அதிபர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் ஜோ பைடன், அப்படி ஒன்றும் பிரமாதமாக எந்தச் சாதனையும் நிகழ்த்தி விடவில்லை. அவரது சொந்தக் கட்சியே தேர்தலுக்கு சற்று முன்னர் அவரைக் கைவிட்டு, கமலா ஹாரிசை வேட்பாளராக நிறுத்தியது. அந்த அளவுக்குத்தான் அவருக்கு மக்கள் ஆதரவு இருந்தது.
இத்தனைக்கும் அவர் சார்ந்த ஜனநாயக கட்சிக்கு, டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியை விடவும் அதிகமான ஆதரவு இருந்தது.
ஒரு கட்டத்தில் உண்மையில் ஜனநாயகக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பலரும் நம்பினார்கள்; அமெரிக்க நாட்டின் முதல் பெண் அதிபராகக் கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று பலரும் எழுதத் தொடங்கினார்கள். களநிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால் தனது ஆக்ரோஷமான பேச்சு செயல்பாட்டால், 'வலுவான தலைவர்' என்கிற தோற்றத்தை உருவாக்கி வெற்றி கண்டார் டொனால்ட் டிரம்ப். இன்று உலக நாடுகளுக்கு ஏற்பட்டு இருக்கும் அச்சத்துக்கு அடிப்படைக் காரணமே... இந்த 'வலுவான தலைவர்' என்கிற தோற்றம்தான்.
2017இல் முதன்முறையாக அதிபர் பொறுப்பேற்ற போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரை இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'அமெரிக்கா முதலில்' என்ற அவரது முழக்கம், உலகம் முழுதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அவருக்கு முன்னர் எந்த அமெரிக்க அதிபரும் இவ்வாறு கூறியது இல்லை.
அது என்ன... 'அமெரிக்கா முதலில்'? தனது பேச்சிலேயே டிரம்ப் தெளிவாகக் கூறிவிட்டார்.
இதுவரை, பிற நாடுகளுடன் அமெரிக்கா கொண்டிருந்த வர்த்தக உறவால், அவ்வந்த நாட்டுக்குதத் தான் பெரும் பயன் கிடைத்தது; இத்தகைய வர்த்தக உறவுகளால் அமெரிக்காவுக்கு இழப்புதான் ஏற்பட்டது அன்றி, எந்த லாபமும் இல்லை. 'என் நாட்டுக்குப் பயன் விளைவிக்காத வர்த்தக உறவில் இனி ஈடுபடப் போவது இல்லை; சர்வதேச வர்த்தகத்தில் எனது அமெரிக்காவின் நலனையே முன்னிறுத்துவேன். எனக்கு எனது நாட்டு நலன்தான் முக்கியம்; அதுதான் முதலில். மற்ற நாடுகளுக்கு உதவுவது எல்லாம் இதற்குப் பிறகுதான்'.
தான் சொன்னபடியே, அமெரிக்க நலனை முன்னிறுத்துவதில் டொனால்ட் டிரம்ப் அதிக அக்கறை காட்டினார். 'இருவருக்கும் சம லாபம்' என்றால் வாருங்கள்; இல்லையேல் விலகிச் செல்லுங்கள், எங்களுக்குக் கவலை இல்லை. ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு கூட்டத்திலும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.
ஒருபுறம் அமெரிக்க உதவியை பெற்றுக் கொண்டு, மறுபுறம் 'அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக' என்று முழக்கமிட்டு உள்நாட்டில் அரசியல் ஆதாயம் தேடிய தலைவர்கள் மூச்சு திணறிப் போனார்கள். உலகின் பெரிய, சிறிய நாடுகள், அமெரிக்க உறவு குறித்த தமது போக்கை மாற்றிக் கொள்ள நேரிட்டது.
அமெரிக்கா, சீனா உடன் வர்த்தக உறவு இன்றி உலகில் எந்த நாடும் தனித்து பொருளாதார வளர்ச்சி காண முடியாது என்பதுதான் இன்று உள்ள யதார்த்தம். இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே தனித்து நிற்கும் வல்லமை கொண்டவை; இங்கு மட்டுமே, உள்நாட்டுப் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது; அதனால், பொருளாதாரத் தன்னிறைவு சாத்தியம் ஆகி உள்ளது.
அது சரி... அவரது நாட்டுக்கு அவர் முன்னுரிமை தருகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? நியாயமான கேள்வி. இதுவரை நடந்து வந்துள்ள சர்வதேச வணிகப் பரிமாற்றங்களை சற்று உன்னிப்பாகப் பார்த்தால், உலக நாடுகளுக்கு இருக்கும் 'சங்கடம்' தெரிந்து விடும்.
சர்வதேச வர்த்தகம் என்றால் ஏற்றுமதி இறக்குமதி இரண்டும் இருக்கும் அல்லவா...? பொதுவாக எந்த நாட்டுக்கும், இன்னொரு நாட்டுடன் ஏற்றுமதி- இறக்குமதி இரண்டும் சமமாக இருப்பதில்லை.
ஏற்றுமதி அதிகம் இருந்து இறக்குமதி குறைவாக இருந்தால் அது, அந்த நாட்டுக்கு ஆதாயம். ஆயிரம் ரூபாய்க்கு ஏற்றுமதி; 500 ரூபாய்க்கு இறக்குமதி செய்கிறேன் என்றால் எனக்கு லாபம் தானே..? பிரதானமாக இங்குதான் அமெரிக்க நலன் பாதிக்கப் படுவதாய் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். அதாவது அமெரிக்காவில் இருந்து சில நாடுகள் செய்யும் இறக்குமதி குறைவு; அங்கிருந்து அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதி மிக அதிகம். இதற்குப் பொருள் - அமெரிக்காவால் இந்த நாடுகள் பயன்படுகின்றன.
இது மட்டும் அல்ல; கலவரம், தாக்குதல், போர்.. தொடங்கி இயற்கைப் பேரிடர் வரை ஒவ்வொரு நெருக்கடியின் போதும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா உதவி வருகிறது; இதனால் எல்லாம் அமெரிக்காவுக்கு இழப்புதான் ஏற்படுகிறதே தவிர, ஆதாயம் ஏதும் இல்லை - என்பதே டொனால்ட் டிரம்பின் மறைமுக வாதம்.
(அது என்ன 'மனிதாபிமான' உதவி என்றால் அமெரிக்கா மட்டுமே நினைவுக்கு வருகிறது?)
உலக நாடுகளின் கவலை என்னவென்று இப்போது புரிந்து இருக்குமே... அமெரிக்காவுடன் தமது வணிகம் பாதிப்புக்கு உள்ளாகும்; அமெரிக்க உதவி குறைந்து போகும்; அவசரத் தேவைக்கு உலக வங்கி உலக நிதியம் போன்ற அமைப்புகளில் இருந்து கிடைக்கும் கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். வெகு நியாயமான அச்சம். காரணம் இவை எல்லாம் அநேகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.
இப்படிச் சொல்வதால், அமெரிக்காவில் உலக நாடுகளுக்கு நன்மை மட்டுமே உண்டு என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏகாதிபத்திய செயல்பாடுகளில் அமெரிக்கா - சீனா இடையே எந்த வேறுபாடும் இல்லை.
எந்த ஒரு நாட்டின் மீதும் தனது அதிகார வலிமையைக் காட்ட அமெரிக்காவோ சீனாவோ தயங்கியதே இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்த, அல்லது நிகழ்ந்து வரும், எந்த ஒரு போருக்குப் பின்னாலும் வல்லரசுகளின் 'ஆட்டம்' உறுதியாய் இருக்கவே செய்கிறது. உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தும் இவ்வகைப் போர்களால் சிறிய நாடுகளே மிகவும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகின்றன. இங்கு வாழும் மக்கள், மென்மேலும் கொடிய வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அவருக்கு அதுவரை டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் இன்னும் தீவிரம் அடையலாம். இதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம். உலக நன்மைக்கு, உலக மக்களின் நலனுக்கு இது நல்லது அல்ல.
மேலும் மேலும் பல அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தாம் ஆளாகலாம் என்கிற அச்சம் சிறிய நாடுகளில் பரவி இருக்கிறது. இதனை, அடிப்படை அற்ற அச்சம் என்று ஒதுக்கி விட முடியாது.
போருக்கு எதிராக, ஆயுதப் பரவலுக்கு எதிராக, ஏகாதிபத்திய அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் இதுவரை குறிப்பிடும்படி எதுவும் பேசவில்லை; செய்யவில்லை. மாறாக இத்தகைய கொடு செயல்களுக்கு ஆதரவாகவே அவர் இருப்பார் என்றுதான் கருத வேண்டி உள்ளது. இந்த அச்சங்களுக்கு எல்லாம் மாறாக, போருக்கு எதிராக மனித குலத்துக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டால் மிகவும் நல்லது. அப்படி அவர் நடந்து கொள்வாரா..? நம்பிக்கை இல்லை; ஆனாலும் பார்ப்போம்.
டொனால்ட் டிரம்ப் வருகையால் நன்மை ஏதும் இல்லையா..? நிச்சயமாக சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
அடிப்படை வாதம் தீவிரவாதம் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் ஒரு தெளிவும் தெம்பும் இருக்கும். ஆங்காங்கே சிறு குழுக்கள் மூலம் அரசுகளைக் கவிழ்க்க சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள், ஊக்குவிக்கப்படாது; முறியடிக்கப் படலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதற்கு, 'ஜனநாயக வழியில்' போராடி, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் 'கும்பல் ஜனநாயகம்', அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, சர்வதேச அங்கீகாரம் பெறாமல் போகலாம்.
இது மட்டும் அன்றி, டொனால்ட் டிரம்பின் வலுவான அரசியல் தலைமை காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம், சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பக் கூடும். இதனால் அங்கே வேலை வாய்ப்புகள் கூடும்; பன்னாட்டு இளைஞர்கள் பயன் பெறக் கூடும். இதனால் அவ்வந்த நாட்டுப் பொருளாதாரம் நன்மை பெறும்.
இன்னும் இப்படி, பல நல் விளைவுகளை எதிர்பார்க்கலாம்.
ஒன்றுக்கொன்று, சங்கிலித் தொடர் போல, பயன்களும் பாதகங்களும் ஏற்படலாம்.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது தெரியும். அப்போது கல்வி அமைச்சராக இருந்தவர் நேற்று ஒரு பேட்டியில் கூறினார் - 'வங்க தேசத்தின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீள வேண்டுமானால் டொனால்ட் டிரம்ப் உடன் நல்லுறவு இருந்தாக வேண்டும். ஆனால் தற்போதுள்ள பொறுப்பு அதிபர், வெளிப்படையாக கமலஹாரிசுக்கு ஆதரவு தந்து ரொனால்ட் டிரம்ப்பைப் பகைத்துக் கொண்டார். இதனை மறந்து வங்கதேசத்துக்கு டிரம்ப் உதவ வேண்டும்.'
உலகளாவிய வர்த்தகம், உலகளாவிய அரசியல், உலகளாவிய உறவுகள்/ தொடர்புகள் இன்று இயல்பாகி விட்டன. எனவே, 'பட்டாம்பூச்சி விளைவு', தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. அமெரிக்காவில் அதிகார மாற்றம், மற்ற பிற நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்யும். இவை நல்லதாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
பார்க்கலாம், ஒருவேளை டொனால்ட் டிரம்ப் மாறியும் இருக்கலாம்!
நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் தானே ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருக்கிறோம்...?