search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    புள்ளி மானுடன் துள்ளி விளையாட்டு... மீனா மலரும் நினைவுகள்
    X

    புள்ளி மானுடன் துள்ளி விளையாட்டு... மீனா மலரும் நினைவுகள்

    • உண்மையிலேயே அப்படிப்பட்ட மான் குட்டிகள் அருகில் வந்து அதை தொட்டு தடவி கொடுத்து மகிழும் வாய்ப்பும் ஜப்பானில் எனக்கு கிடைத்தது.
    • அமைதி நினைவு அருங்காட்சியகம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

    மான் குட்டியே...

    புள்ளி மான் குட்டியே

    உன்மேனிதான்

    ஒரு பூந்தொட்டியே....

    என்ற பாடலை கேட்டு ரசித்து இருப்போம். நிஜத்தில் மான் குட்டியை அருகில் சென்று பார்த்து ரசித்து இருப்போமா?

    பெரும்பாலும் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. ஒரு வேளை பூங்காக்களிலோ, மிருக காட்சி சாலைகளிலோ அந்த வாய்ப்பு கிடைத்தாலும் நாம் அருகில் சென்றதும் அந்த புள்ளி மான்கள் துள்ளி ஓடிவிடும்.

    துள்ளி ஓடும் மான்களை பார்த்தாலே வாவ்... எவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த மான்கள். நம் அருகில் வந்தால்... அதை தொட்டு பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று ஏங்கி இருப்போம்.

    உண்மையிலேயே அப்படிப்பட்ட மான் குட்டிகள் அருகில் வந்து அதை தொட்டு தடவி கொடுத்து மகிழும் வாய்ப்பும் ஜப்பானில் எனக்கு கிடைத்தது.

    நம்மூரில் ஆட்டு குட்டிகள், நாய் குட்டிகள் எங்கு பார்த்தாலும் நடமாடும். கூப்பிட்டால் நம் அருகில் வரவும் செய்யும். அதைப் போலதான் ஜப்பானில் ஹிரோஷிமா அருகில் உள்ள மியாஜிமா என்ற நகரில் எங்கு பார்த்தாலும் மான்கள் சுற்றிக்கொண்டிருக்கும். அதை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.

    மெல்ல மெல்ல நடந்து மான்கள் அருகில் சென்றேன்.

    ஆனால் என்னை பார்த்து அந்த மான்கள் ஓடவில்லை. தொட்டேன். ஆசையில் தடவினேன். ம்கூம்... நகரவில்லை. அதன் அருகில் இருந்து புகைப்படமும் எடுத்து கொண்டேன். மானை அருகில் சென்று தொட்டு பார்த்தது இதுவே முதல் தடவை பார்ப்பதற்கு அழகாகவும், தொட்டு பார்த்தால் மிருதுவாகவும் சூப்பராக இருந்தது. அதனால் தான் மான்களை எல்லோருக்கும் பிடிக்கிறது.

    அதனால் தான் கவிஞர்களும் மான்களின் அழகில் மயங்கி பாடல் எழுதுகிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.

    ஹிரோஷிமா...

    முதல் முறையாக அந்த நகரத்தை பார்க்க சென்றேன். இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான நகரம் என்று வரலாற்றில் படித்து இருக்கிறேன். எனவே எப்படியாவது அந்த நகரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது அந்த நகரத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

    ஹிரோஷிமாவுக்கு செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடம் அங்கு கட்டமைக் கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் தான்.


    அமைதி நினைவு அருங்காட்சியகம் என்று பெயர் வைத்துள்ளார்கள். உள்ளே சென்றதும் அங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள பொருட்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அணு குண்டு கதிர்வீச்சு பேரழிவின் ஆறாத வடுக்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

    கொத்து கொத்தாக மாண்ட மக்கள் விட்டுச் சென்ற உடமைகள், அந்த பேரழிவின் புகைப்பட காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.

    அணுகுண்டு வீச்சுக்கு முன்பிருந்த ஹிரோஷிமா நகரத்தையும் அந்த பேரழிவையும் பார்க்கும் போது எப்படி இருந்த அழகிய நகரம் இப்படி சிதைத்து உருக்குலைந்து போயிருக்கிறதே என்று நடுக்கத்துடன் பார்க்க வைக்கிறது.

    அந்த அணுகுண்டு வீசப்பட்ட போது அதில் இருந்து வெளியேறிய கதிர் வீச்சுகள் கருமை நிறத்தில் வந்ததாகவும் உடனே ஏற்பட்ட தாகத்தால் வாயை திறந்த படி அங்குமிங்கும் ஓடியிருக்கிறார்கள். கதிர் வீச்சின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அங்கு மிங்கும் ஓடியவர்கள் அதை சுவாசிக்க சுவாசிக்க செத்து விழுந்திருக்கிறார்கள்.

    ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்த ஒருவர் உடல் முழுவதும் அரிக்கப்பட்டு அவர் அமர்ந்து இருந்ததற்கான அடையாளம் மட்டும் கருமையாக இருந்து இருக்கிறது.

    அதை அப்படியே சேகரித்து காட்சிபடுத்தி இருக்கிறார்கள்.

    குண்டு வீச்சின் வெப்பத்தால் மரம், கல், உலோகம், கண்ணாடி ஆகியவை எந்த மாதிரி பாதிப்புகளை சந்தித்தது என்பதும் கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மனிதர்களின் சதைகள் வெந்து போனதும், கட்டிடங்கள் நெருப்பு பிழம்புகள் போல பழுத்து இருந்ததையும் புகைப்படங்களாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்.

    பொதுவாக அருங்காட்சியகங்களை பார்த்தால் சுகமான நினைவுகளுடன் வெளியே வருவார்கள். ஆனால் இந்த காட்சி அரங்கத்தை பார்த்தால் சோகமான கனத்த இதயத்துடன் தான் வெளி வர முடிகிறது. இனி இப்படி ஒரு போர் வரக்கூடாது என்பதே இதை பார்ப்பவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். இவை அமைந்து இருப்பது ஒரு பூங்காவில் மிகப்பெரிய அரங்கத்தில். ஆனால் வெளியே நகரத்தில் பாதிப்புகள் எதுவும் தெரியவில்லை. மிகப்பிரமாண்டமாக அந்த நகரத்தை மீண்டும் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்.

    பாதிப்பு காட்சிகளையும் இப்போது மீட்கப்பட்டுள்ள அந்த நகரத்தின் அழகிய தோற்றத்தையும் பார்க்கும் போது இதற்காக எவ்வளவு உழைத்து இருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.

    இவ்வளவு பேரழிவையும் தாங்கி, தாண்டி எழுந்து ஒரு முன்னணி நாடாக ஜப்பான் உயர்ந்து நிற்பதை பார்க்கும் போது அந்த மக்களின் கடுமையான உழைப்பின் மீது மிகப்பெரிய மரியாதை வருகிறது.

    ஜப்பானின் இந்த முன்னேற்றத்தை பார்த்து தான் கவிஞர் கண்ணதாசன் அன்றே பாடினார். 'சின்னஞ்சிறிய ஜப்பான் நாடு என்ன முன்னேற்றம் காலை எழுந்ததும் ஆணும்-பெண்ணும் என்ன துடிதுடிப்பு. காலும், கையும் எந்திரம் போலே என்ன சுறு சுறுப்பு...' என்று...!

    பத்து நாட்கள் நான் ஜப்பானில் இருந்ததை அறிந்ததும் ரசிகர்கள் முக நூல்கள் வாயிலாக தேடியிருக்கிறார்கள். அதை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். இன்றும் ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடும் மீனாவாக உங்கள் மீனா இருக்கிறேன் என்பதை நிமனைத்தாலே பெருமையாக இருக்கிறது.

    மலையாள நட்சத்திரங்களுடன் இணைந்து ஐக்கிய அரவு நாடுகளில் நடத்தப்பட்ட கலக்கல் கலை நிகழ்ச்சிகள்...

    மறக்க முடியாத அந்த நினைவுகளை அடுத்த வாரம் பகிர்கிறேன்...

    (தொடரும்)...

    Next Story
    ×