search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே! அத்தியாயம்- 15
    X

    உசுரே நீ தானே! அத்தியாயம்- 15

    • சுற்றும் முற்றும் பார்த்தாள், அவள் இருக்கும் காரைத் தவிர வேறு கார்களோ ஆட்களோ இல்லை.
    • ரிலாக்ஸ் டீ ஸ்டாலில் இருந்த டிவியில் மூவரும் உன்னிப்பாய் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    "டேவிட், நான் திவ்யா பேசுறேன்" என்ற குரல் கேட்ட அந்த நொடியில் இருந்து சரியாய் இருபது நிமிடங்களுக்கு முன்... திவ்யா மயக்கத்தில் இருந்து கண்விழித்தாள். ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் ஒரு மாதிரியான மங்கலாகவே எல்லாம் தெரிந்தது. உஸ்ஸ் என்ற காற்றின் சத்தமும் வண்டிகள் விரைந்து செல்லும் ரோட்டின் டயர் ஒலிகள் கேட்க... மெதுவாய் காட்சிகள் புலப்பட ஆரம்பித்தது.

    அது ஒரு ரோடு, அதுவும் ஊருக்கு வெளிப்புற ரோடு. மெதுவாய் காரின் ரோடு பார்க்கும் முன் பக்க கண்ணாடி வழியாய் பார்த்தாள். எதிரே இருந்த ஒரு காபி கடையில் இருவர் காபி குடித்தபடியே தம் அடித்துக் கொண்டு இருந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தாள், அவள் இருக்கும் காரைத் தவிர வேறு கார்களோ ஆட்களோ இல்லை.

    "நான் எப்படி இங்க... இந்த வண்டியில லாரியில தானே ஏறினோம். ஆமா டேவிட் எங்கே என்னை விட்டுட்டு எங்கபோனாரு? இவன்க ரெண்டு பேரு யாரு? லாரில தானே ஏறினோம் ? அப்போ லாரி எங்க? அந்த டிரைவர் மனோகர் எங்க...?

    யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாய் திவ்யாவுக்குப் புலப்பட ஆரம்பித்தது. வண்டி ரிப்பேர் ஆச்சு... மனோகர் வந்தான்... மெக்கானிக்கை கூப்பிட லாரில ஏறினோம்... மனோகர் ஜூஸ் கொடுத்தான்... தூங்கிட்டேன்... இல்ல மயங்கிட்டேன்... அப்போ...டேவிட்டை எங்கேயோ இறக்கிவிட்டு என்னை மட்டும் மனோகர் கடத்தி இருக்கான்.

    இடையிலே வண்டிய மாத்தி கூட்டி போறாங்க... இவன்க யாரு? எதுக்கு என்னை கடத்துறாங்க? என்று யோசித்தபடியே அந்த டீக்கடையின் போர்டை கவனித்தாள்.

    "ரிலாக்ஸ்" டீ ஸ்டால் மனதில் பதிய வைத்தாள். போர்ட்டில் உள்ள ஊர் பெயர் பக்கத்தில் உள்ள எல்லாத்தையும் டக்டக்கென்று மனதில் பதிய வைத்தாள். பதட்டமில்லாமல் யோசித்தாள்... "இப்போது நான் என்ன செய்யவேண்டும்...?" யெஸ் முதலில் டேவிட்டை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி - யோசித்தபடியே காருக்குள் கண்களால் துழாவினாள்.

    டிரைவர் சீட்டிற்கு அருகே கியர் அருகில் அந்த சார்ஜரில் ஒரு செல்போன் சார்ஜ் ஆகிக்கொண்டு இருந்தது. "மயங்கி இருக்கேன் என நினைச்சு போனை தைரியமா சார்ஜ் போட்டு போயிருக்கானுங்க..."

    அவர்களை பார்த்தாள். இவள் மயக்கத்தில் தானே இருக்கிறாள் என்ற தைரியத்தில் போனை விட்டுட்டு போய் இருக்கிறார்கள். மெதுவாய் கை நீட்டி போனை எடுக்கப் போனவள் குரல் கேட்டு திடுக்கிட்டாள். சடாரென்று கையை இழுத்து மீண்டும் தலை சாய்த்து மயங்கி இருப்பது போல் பாவனை செய்ய ஆரம்பித்தாள்.

    "இன்னுமாடா டீ சாப்பிடுறீங்க... வாங்கடா டயம் ஆகுது" டிரைவர் சீட்டில் ஏறியவன் கூப்பிட... "தோ" வந்துட்டோம்பா... இருவரும் வந்து வண்டியில் ஏறி கதவு அடைக்கும் சத்தம் கேட்டது... வண்டி கிளம்பியது. அப்போது ஏறியவர்களில் ஒருத்தன் "நிறுத்து... நிறுத்து..." என கத்தவும்... வண்டியை நிறுத்தி என்னடா?' என டிரைவர் சீட்டில் இருந்தவன் எரிச்சலாய் கேட்டான்...

    அந்த டீக்கடையில இருக்குற டிவியில பாருங்க, இந்த பொண்ணோட போட்டோ போட்டு நியூஸ் போகுது... வாங்க என்னன்னு பார்ப்போம்... மூவரும் இறங்கி கதவை அடைத்து போன சில வினாடிகள் கழித்து திவ்யா கண் திறந்து பார்த்தாள்...

    அந்த ரிலாக்ஸ் டீ ஸ்டாலில் இருந்த டிவியில் மூவரும் உன்னிப்பாய் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். டிவியில் போட்டோ காட்டப்படுவது இங்கிருந்து பார்க்கும்போது திவ்யாவுக்கும் தெரிந்தது. இதுதான் சமயம் என போன் எடுத்து டயல் செய்தாள். அந்த போனை தான் டேவிட் எடுத்தான். அப்போது தான் இவள், "டேவிட் நான் திவ்யா பேசுறேன்" என்றாள். "சொல்லு திவ்யா... எங்க இருக்க...எதுவும் ஆகலியே"

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    "நான் ஆல்ரைட் டேவிட்... என்னை காணோம்னு டிவி நியூஸ் ஓடுது..."

    "ஆமா... போலீஸ் கொடுத்து இருக்காங்க...சரி சொல்லு நீ எங்கே இருக்க?"

    "டேவிட் இடம் கரெக்ட்டா தெரியல... ஆனா ரோட்டோர ஒரு டீக்கடை... பேரு ரிலாக்ஸ் டீ ஸ்டால்... இடம் குத்துப் பட்டி சந்திப்புனு போர்டுல போட்டிருக்கு... என்னை எதுக்கு கடத்துனாங்கன்னு தெரியல...."

    திவ்யா பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் காரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    "டேவிட் அவங்க மறுபடி வராங்க. நான் கட் பண்றேன்..." போனை ஆன் பண்ணி டயல் செய்த நம்பரை அவசர அவசரமாய் "டெலிட்" செய்தாள்.

    போனை மறுபடியும் இருந்த இடத்திலேயே சார்ஜில் போட்டு மீண்டும் அதே பொசிசனில் மயங்கியது போல் இருந்துகொண்டாள்.

    அவர்கள் மூவரும் வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். "நல்லவேளை கார் தள்ளி நின்னதாலே காருக்குள்ளே இருக்கிற இவளை டீக்கடைக்காரன் பாக்கலை -

    ஒருவன் சொன்னான், டிவியில நியூஸ் போறத பார்த்தா "இவளை இப்படியே மயக்கமான நிலையில் பின்சீட்டில் உக்கார வச்சு கூட்டிப் போறது சரியில்ல..."

    'யாராச்சும் இவளை அடையாளம் கண்டுட்டா சிக்கல்தான்' - இன்னொருவன் கூறினான்.

    'ம்... என்ன பண்ணலாம்' நாம போகவேண்டிய இடம் ஜஸ்ட் ஒருமணி நேரம்தான். ஆனாலும் அந்த ஒருமணி நேரம் ரிஸ்க்தான்...மூன்றாமவன் யோசித்தான்.

    'படுபாவிங்க என்ன பண்ணபோறான்களோ' திவ்யா நினைத்து முடிக்கவும்... ஒருவன் சொன்னான் "பேசாம இவ கைய... கால... கட்டி... வாயில துணியை வெச்சு அடைச்சி டிக்கியிலே, தூக்கிப் போட்டுட்டா"

    திவ்யா உள்ளுக்குள் அதிர்ந்தாள்...

    "ஆமால்ல... ஒருமணி நேரம் தான டிக்கியிலேயே கிடக்கட்டும்" நமக்கும் இவளை யாரும் பார்க்காம இருக்கணும்னா அதான் பாதுகாப்பு..." பேசியவன் இறங்கிப் போகும் சத்தமும் அவன் டிக்கியைத் திறக்கும் சத்தமும் கண்மூடி இருந்த திவ்யாவுக்கு கேட்டது...

    அப்போது டிரைவர் பக்கத்து சீட்டில் உள்ளவன் படபடப்பாய் சொன்னது."யேய் சார்ஜில் போட்டுப் போன என் போன் பொசிஷன் மாறி இருக்கு. நான் இப்படி வெச்சுட்டு போகலியே..."

    மயக்கத்துல இருக்கவ போன எப்படி எடுப்பா? டிரைவர் சீட்டில் உள்ளவன் கேட்டான்.

    "ஒருவேளை போன்ல யாருக்கோ தகவல் சொல்லிட்டு நாம வர்றதை பார்த்ததும் மயங்கி இருக்கிற மாதிரி நடிக்கிறாளோ?''

    "அவ்வளவுதான் கண்டுபிடிச்சுட்டான்க...இனி இருந்தால் ஆபத்து" என எண்ணி காரின் கதவைத் திறந்து மின்னல் வேகத்தில் ஒடத் துவங்கினாள்..

    'ஏய் பிடி-பிடி-' மூவரும் துரத்த ஆரம்பித்தனர்...

    டீ கடைக்காரன் அவர்கள் துரத்திப் போவதை எட்டிப் பார்த்தான்...

    போலிஷ் ஸ்டேஷன்.

    "நீங்க சொன்ன ஸ்பாட்தான், உங்களுக்கு திவ்யா போன் பண்ணின செல்போன் நம்பர ஜிபிஎஸ் சிம் காட்டுது... வாங்க உடனே கிளம்பலாம்...ஏற்கெனவே அந்த லொகேஷனுக்கு பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி லோக்கல் போலிஷ் டீமும் போய்கிட்டு இருக்காங்க... கமான் லெட்ஸ் கோ..."

    இன்ஸ்பெக்டர் அழகர் ஜீப்பில் ஏற, பின்னாடி வேனில் டேவிட், நண்பர்கள், மொத்த குடும்பமும் ஏறியது... பெருமாள் தான் வந்த காரில் அவர்களை பின்தொடர்ந்தான். வண்டியை ஒட்டியபடியே பெருமாள் தன செல்போன்ல இருந்து யாருக்கோ டயல் செய்தான்.

    ரிலாக்ஸ் டீ ஸ்டால்...

    போலீஸ் ஜீப் நின்றது. கடையில் இருந்தவன் போலீசை பார்த்ததும் வெலவெலத்து எழுந்து நின்றான். எப்பவோ வர்ற, போற லாரி,கார், பஸ்சில் வருகிறவர்களுக்கு டீ, காபி , பிஸ்கெட், வித்து பிழைப்பை ஓட்டுற என் கடைக்கு முன்னால போலீசா - அவன் வெறித்த பார்வையில், முகம் வெளிறி... ஜீப்பில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டரை பார்த்து என்னங்க ஐயா வேணும்? என கேட்டான்...

    "யோவ், மேலூர் ஸ்டேஷன்ல இருந்து தகவல் வந்துச்சி.. ஒரு பொண்ணை மூனு பேரு கடத்திட்டு போறாங்கன்னு இங்க இருந்துதான் அந்த பொண்ணு அவ புருஷனுக்கு தகவல் கொடுத்து இருக்கா. அடையாளத்துக்கு உன் கடை பேரை தான் சொல்லி இருக்கா. அப்படி சந்தேகப்படுகிற மாதிரி யாரையாவது பாத்தியா?" இன்ஸ்பெக்டர் குரலில் விசாரணையை விட மிரட்டல் அதிகம் இருந்தது.

    "இல்லிங்கய்யா அப்படி யாரும் வரலையே" கடைக்காரன் அப்பாவியாய் சொன்னான்... உன் பேரு என்னய்யா?'

    "பழனிங்க"

    "இங்க பாரு பழனி, போலீசு கிட்ட பொய் சொன்னாலோ பார்த்ததை மறைச்சாலோ பிரச்சனை வரும்னு தெரியுமா தெரியாதா?"

    "சத்தியமா அப்படி யாரையும் பாக்கலைங்கோ..."

    "கடையிலே டிவி வெச்சிருக்க, நியூஸ் பார்க்க மாட்டியா"

    "இல்லிங்கயா எப்பவும் பாட்டுத்தாங்கய்யா ஓடும். காபி, டீ குடிக்க வர்றவங்க பாட்டுதான் போடச் சொல்லுவாங்கய்யா..."அப்பட்டமாய் அழகாய் பொய் சொன்னான் பழனி.

    "உன் கடையை தானே ஸ்பாட் பண்ணி அந்த பொண்ணு சொல்லி இருக்கு?" பழனி திகைத்தான்... அவன் பார்வையின் திருட்டுத்தனத்தை செகண்டில் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் "பொளேர் "என்று ஒரு அறை விட, கடைக்குள் தெறித்து விழுந்தான் பழனி.

    "கான்ஸ்டபிள்ஸ், போய் அவனை தூக்குங்கய்யா..." இரண்டு கான்ஸ்டபிள்கள் கடைக்கு உள்ளே போய் வீழ்ந்து கிடந்த பழனியை தூக்கி அவன் கைகளை தோளோடு பற்றி வெளியே கொண்டுவந்தனர்.

    "ஐயா அடிக்காதீங்கய்யா... உண்மையைச் சொல்லிடுறேன். ஆமாய்யா மூனுபேரு ஒரு பெண்ணோட ஜீப்பில வந்தாங்க..." அவர்கள் வந்ததில் இருந்து திவ்யாவை துரத்திட்டு போனது வரை வரிவிடாமல் மூச்சிரைக்க சொல்லிமுடித்தான் பழனி.

    "இவ்வளவு நடந்திருக்கு அப்புறம் ஏண்டா பொய் சொன்னே?"

    "அந்த பொண்ண துரத்திட்டு போனவன்களில் கார் எடுத்துட்டு போக ஒருத்தன் மட்டும் திரும்ப வந்தான். அவன்தான்யா பத்தாயிரம் கொடுத்தான். யார் கேட்டாலும் எதையும் சொல்லக் கூடாது. சொன்னா கொன்னுடு வேன்னு மிரட்டினான். அதான்யா பயந்து .."

    "அவன்க எந்தப்பக்கமா போனாங்க?" அதோ அந்தப்பக்கமா...

    பழனி காட்டிய திசை புதர் மண்டிய இடம்... அதற்கு அந்தப்புறம் ஒரே மரமும் செடியுமாய் காடுதான் தெரிந்தது.

    "ஆமாய்யா காட்டுக்குள்ளேதான் பொண்ணு ஓடுச்சு..."

    "திரும்ப வந்து கார எடுத்தவன் காரோடவா காட்டுக்குள்ளே போனான்?" - இன்ஸ்பெக்டர் மடக்கினார்...

    "இல்லிங்க... கார எடுத்தவன் இந்த ரோட்டுல போயி அப்படிக்கா இடதுபக்கம் திருப்பிகிட்டு ரோட்ல போனான்..."

    "கார் நம்பர் கவனிச்சியா?"

    "இல்லிங்க காசு வாங்கினதாலே எதையும் குறிக்கணும்னு தோணலை"

    "உன்னை மாதிரி ஆட்களாலே தான் குற்றங்களே பெருகுது... யோவ் கான்ஸ்டபிள் இவனை ஜீப்ல ஏத்து"

    "ஐயா வேணாங்கய்யா விட்டுடுங்க அய்யா" பழனி கதற கதற போலீஸ் கான்ஸ்டபிள் அவனை ஜீப்பில் ஏற்றினார்... அப்போதுதான் வந்து நின்ற மூன்று வண்டிகளையும் கவனித்தார்...

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    Next Story
    ×