search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஞானம் என்றால் என்ன?
    X

    ஞானம் என்றால் என்ன?

    • ஞானம் அடைந்த நிலையில் தான் நமது வாழ்க்கை அர்த்தம் உள்ள வாழ்க்கையாக உள்ளது.
    • ஞானம் பற்றிய பலவிதமான கதைகள் உள்ளன.

    மனித வாழ்வின் மாபெரும் இலக்கு தான் ஞானம் அடைதல்.

    " உண்மையில் நாம் அனைவரும் ஞானம் அடைந்த பிறகு தான் வாழவே ஆரம்பிக்கிறோம்", என்று மஹாராஷ்டிரா ஞானி நிசர்க தத்த மகாராஜ் கூறுகிறார்.

    ஞானம் அடையாத வரையிலும் நடைபெறும் நம்முடைய வாழ்க்கை அனைத்தும் வாழ்க்கையே கிடையாது என்று அவர் கூறுகிறார்.

    ஞானம் அடைந்த நிலையில் தான் நமது வாழ்க்கை அர்த்தம் உள்ள வாழ்க்கையாக உள்ளது.

    ஞானம் அடைவது என்றால் என்ன?

    நமது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து போன் செய்தார்: "அய்யா ஞானம் அடைவதாக இருந்தால் நாற்பது வயதுக்குள் ஞானம் அடையவேண்டும் என்று கூறுகிறார்களே அப்படிதானா?"

    "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டபோது அவர், "ஞானம்

    அடையும்போது தலையில் ஒரு இடி இறங்கியது போல் இருக்குமாம். நாற்பது வயதைக் கடந்தவர்களால் அதனைத் தாங்க முடியாதாம்" என்று கூறினார்.

    "நாற்பது வயதைக் கடந்துவிட்டால் ஒரு இடி தாங்கியை வைத்துக் கொள்ளுங்கள்! " என்று அவரிடம் விளையாட்டாகக் கூறினோம்.

    இப்படி ஞானம் பற்றிய பலவிதமான கதைகள் உள்ளன.

    என்னுடைய சொந்த வாழ்க்கையில் என்னுடைய கவனம் பதினெட்டாவது வயதில் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது.

    நான் வசித்து வந்தது ஒரு சிறிய கிராமம். அந்த காலத்தில், செல்போன், டிவி என்று எவையும் கிடையாது.

    ராமகிருஷ்ண பரமஹம்சரது உபதேச மஞ்சரி என்ற பழைய நூல் ஒன்று மட்டும் எங்கள் வீட்டில் இருந்தது. ஆன்மிகம் சம்பந்தமாக அவருடைய கருத்துகள் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆயின.

    இறைவனிடம் பக்தி செய்யவேண்டும், இறைவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

    தியானத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. ஏதோ எனக்குத் தெரிந்தபடி தியானம் செய்து பார்ப்பேன்.

    என்னைச் சுற்றிலும் இறைவனே நிறைந்திருப்பது போல் எண்ணிக் கொண்டு தியானம் செய்வேன்.

    அப்படி செய்யும் தியானங்கள் கூட ஒரு விதமன அமைதியைக் கொடுக்கும். நாட்கள் செல்லச் செல்ல ஆன்மிகம் சார்ந்த நண்பர்களின் அறிமுகம் கிடைத்தன. ஞானிகள் பலருடைய கருத்துகளும் தெரியவந்தன. இதனால் எனது ஆன்மிக முயற்சிகள் தீவிரமடைய ஆரம்பித்தன.

    ஆன்மிகம் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடும் போது நமது மனம் ஒருவிதமான ஆனந்த அனுபவத்துக்குப் போய்விடும். அந்த அனுபவம் சில நாட்களில், நாள் முழுவதும் இருக்கும். பிறகு அது நம்மை விட்டுப் போய் விடும்.

    சில சமயங்களில் அந்த அனுபவங்கள் இரண்டு மூன்று நாட்கள் கூட நீடித்திருக்கும். பிறகு அது நம்மை விட்டுப் போய் விடும்.

    இப்படி வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் ஆனந்த அனுபவம் நிரந்தரமாக நம்மிடமே தங்கிவிட்டால் அதுதான் ஞானம்.

    இப்படிதான் நாங்கள் நண்பர்கள் அனைவருமே எண்ணிக் கொள்வோம். ஒவ்வொரு ஞானிகளும் இதையே உபதேசிப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

    ஸ்ரீ பகவத்

    எங்களுடைய முயற்சி தொடர்ந்தது. அவ்வப்போது நல்லவிதமான அனுபவங்களும் கிடைத்து வந்தன. ஆனால் ஞானத்தை நோக்கிய எங்களுடைய தேடல்கள் ஒரு முடிவுக்கு வராமல், தொடர்கதையாகவே இருந்து வந்தன.

    எங்களுடைய முயற்சி என்றுதான் நிறைவு பெறும்? என்றுதான் நாங்கள் ஞானம் அடைவது?

    ஜே.கிருஷ்ணமூர்த்தி எனும் ஞானியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய நூல்கள் ஆரம்பகால சொற்பொழிவுகள் மற்றும் பிற்கால சொற்பொழிவுகள் என இரண்டு வகையாக வெளிவந்துள்ளன.

    அவர் தனது ஆரம்பகால சொற்பொழிவுகளில் இவ்வாறு கூறுவார்: "நீங்கள் ஒரு திராட்சையை உருவாக்க வேண்டுமானால் நீங்கள் முதலில் திராட்சை விதையை தோட்டத்தில் விதைக்க வேண்டும். அது முளைத்து செடியாக வளரும். பிறகு பூக்கும், காய்க்கும். அதன் பின்னரே திராட்சை பழம் உங்களுக்குக் கிடைக்கும்...

    "ஆனால் எனது சொற்பொழிவைக் கேட்க நீங்கள் வரும் போது நீங்கள் திராட்சை விதையோடு மட்டும் வந்தால் போதும். கூட்டத்தின் முடிவில் நீங்கள் திராட்சைப் பழத்துடன் திரும்பிச் செல்லலாம்!"

    ஞானம் அடைவது அவ்வளவு சுலபம் என்பது போல் கூறுவார்.

    பிறகு அவர் தமது பிற்கால சொற்பொழிவுகளில் இவ்வாறு கூறுவார்: "நானும் உங்களிடம் அறுபது வருடங்களாகப் பேசி வருகிறேன். நீங்களும் கேட்டு வருகிறீர்கள். ஆனால் மாற்றம் எதுவுமே உங்களிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை."

    ஞானம் அடைவது சுலபமானதா அல்லது கடினமானதா? எவ்வளவு காலம் தான் முயற்சி செய்ய வேண்டும் ? அரசு விடுமுறை நாட்களில் தியானம் செய்வதற்காக, நண்பர்களுடன் மலைப் பிரதேசங்களுக்கு நாங்கள் செல்வதுண்டு. ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலையில் கடனா நதியை ஒட்டியிருக்கும் அத்ரி மகரிஷி ஆஸ்ரமத்துக்குப் போயிருந்தோம்.

    போகும் வழியில் மலைப் பாதையில் மலைக்குகை ஒன்று இருந்தது. முஸ்லிம்கள் அதனை தர்காவாக்கி வழிபாடு செய்து வந்தனர். அந்த குகையில் முஸ்லிம் துறவி ஒருவர் வந்திருந்து தியானம் செய்வதாகக் கூறினார்கள்.

    'நாமும் தியானம் செய்கிறோம்; அவரும் தியானம் செய்கிறார். நாம் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவரும் வந்தால் சந்தித்துப் பேசலாமே ' என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

    ஆனால் அன்று இரவே அந்த முஸ்லிம் துறவி எங்களைப் பற்றி கேள்விப்பட்டு நாங்கள் இருக்கும் இடத்துக்கே வந்து விட்டார்.

    அவர் என்னைப் பார்த்து, "இரவு எத்தனை மணிக்குத் தூங்குவீர்கள்?" என்று கேட்டார்.

    அது செல்போன் எதுவும் இல்லாத காலம்.

    "இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துவிடுவோம்" என்று கூறினேன்.

    அவர் மிகவும் ஆதங்கப்பட்டார்:

    "அய்யய்யோ! ஒன்பது மணிக்கே படுத்து விடுவீர்களா? இரவில் நாம் தூங்கவே கூடாது. இரவு தான் விழித்திருந்து தவம் செய்ய வேண்டும்!"

    அவர் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் போய்விட்டார்.

    தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அவர் சொல்லி விட்டாரே என்று தூங்கவும் பயமாக இருந்தது. பிறகு ஒரு வழியாக தூங்கி விட்டோம்.

    இது போல் இன்னும் ஒரு சம்பவம். திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள ஒரு ஜீவசமாதி ஆலயம் எனது பொறுப்பில் இருந்து வந்தது. வழக்கமாக பூஜை செய்து வருபவர் ஒரு முறை விடுப்பில் சென்றிருந்தார். அங்கு தங்கி இருந்த எண்பது வயதுள்ள சாது ஒருவரை பூஜை செய்ய வைத்திருந்தோம்.

    ஓய்வு நேரத்தில் அவருடைய ஆன்மிக அனுபவங்களைக் கேட்டோம்.

    அவரும், "ஞானத்தைத் தேடி நான் எனது பதினாறாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் போகாத கோயில்களும் கிடையாது; ஆசிரமங்களும் கிடையாது. அது போல் நான் பார்க்காத ஞானிகளும் கிடையாது. எனக்கும் எண்பது வயது ஆகிவிட்டது. இன்னும் அந்த ஞானம் எனக்குக் கிடைத்தபாடில்லை. எப்போதுதான் அது எனக்குக் கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியவில்லை" என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    அதைக்கண்டு எங்களுக்கு பரிதாபம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, ஒரு விதமான பயம்தான் எங்களுக்கு ஏற்பட்டது.

    பதினெட்டாவது வயதில் ஆரம்பித்த என்னுடைய பயணம் முடிவடைய இன்னும் நான் எவ்வளவு காலம் பாடுபடவேண்டுமோ தெரியவில்லையே என்ற பயம்தான் ஏற்பட்டது.

    ராமகிருஷ்ணருடைய படத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? ஒரு வித பரவச நிலையில் இருப்பது போன்றே அவருடைய புகைப்படங்கள் எல்லாம் காணப்படும்.

    வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் அந்தப் பரவச நிலை நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடுமேயானால் அது தான் ஞானம் என்பது என்னுடைய கருத்து. அதனை அடையவே தேடு தேடென்று தேடிக் கொண்டிருந்தேன். பதினெட்டாவது வயதில் ஆரம்பித்த எனது தவ முயற்சிகள், இருபத்து ஒன்பது வருட போராட்டத்திற்குப் பிறகு எனது நாற்பத்து ஏழாவது வயதில் பூர்த்தி அடைந்தது.

    எந்தவொரு நிரந்தரமான பரவசநிலையைத் தேடி, படாத பாடுபட்டு வந்தேனோ, அந்தப் பரவச நிலை என்னை ஆட்கொண்டுவிட்டது.

    இருபத்து நான்கு மணி நேரமும் பரவசநிலைதான். தூங்கும் போது கூட அந்தப் பரவச நிலையும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

    அந்தப் பரவச நிலையானது, ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டும் அல்ல, வருடம் முழுவதும் இயங்கியது.

    ஒவ்வொரு விநாடியிலும் ஆனந்த போதையில் மிதந்து கொண்டிருந்தேன்.

    அந்த போதை உணர்வை என்னால் மட்டுமே உணரமுடியும். என்னோடு தொடர்பு கொள்பவர்களால் எனது அனுபவ நிலையை உணர முடியாது.

    அக்காலத்தில் நான் வழக்குரைஞராக பணியாற்றி வந்தேன். இந்த அனுபவத்தின் காரணமாக எனது பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆன்மிகத்தின் உச்சநிலையான ஞானத்தை அடைந்து விட்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. ஆன்மிக ஆய்வுகளில் கரை கண்ட நமது நண்பர்களும் நான் அடைந்த ஞானத்தை உறுதி செய்து அங்கீகரித்தனர்.

    வாழ்க்கை என்றால் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

    ஆனால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எள் அளவு கூட என்னைப் பாதிக்கவில்லை.

    எனது ஆனந்த அனுபவங்களே கவசமாக இருந்து என்னைக் காவல் காத்தன.

    இதுதான் ஞானமா?

    தொடர்புக்கு வாட்ஸப் - 8608680532

    Next Story
    ×