search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாழ நினைத்தால் வாழலாம்!
    X

    வாழ நினைத்தால் வாழலாம்!

    • கதிரவனின் முதலாளியாகும் எண்ணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.
    • நல்ல நண்பர்கள் ஒருபோதும் தன் நண்பர்களுக்கு இடைஞ்சல் தரும் எதையும் செய்ய மாட்டார்கள்.

    விதி எப்பொழுதும் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் விளையாடி வேடிக்கை காட்டுவதில் பெருமை கொள்கிறது. காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடும் ஒரு கருவி. சிலர் காலத்தோடு கைகோர்த்துக்கொண்டு கலைத்தவற்றை சரி செய்து கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் காலத்தோடு போராடத் திறனின்றி மனம் உடைந்து போய் கோழைத்தனமான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். நெருக்கடிகளில் நிதானத்தை இழந்து விடுகிறார்கள். கதிரவனின் வாழ்க்கையையும் காலம் புரட்டிப் போட்டது.

    கதிரவன் வேலை பார்த்த அந்தத் தனியார் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி இழுத்து மூடப்பட்டதும் நிலைகுலைந்து போனான். மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த அவனுக்கு வேலை இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் இருந்த சொற்பப் பணத்தை வைத்து ஒரு மாதம் குடும்பத்தை நடத்த முடிந்தது.

    "வேறு எங்காவது வேலை கிடைக்குமா?" என்று முயற்சி செய்ய அவன் ஏனோ விரும்பவில்லை.

    " நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேல் ஆகிவிட்டது இனிமேல் எங்கே சென்று வேலை தேடுவது?" என்ற தயக்கத்தில் இருந்தான். கவுரவமான ஒரு வேலையில் இருந்து விட்டோம். இப்பொழுது அது இல்லை என்றாகிவிட்டது. இனிமேல் யாரிடம் போய் அடிமைத்தனமாக இருப்பது சொந்தமாகவே தொழில் ஒன்றைத் தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்களும் "அதுதான் சரி. அப்பொழுதுதான் நீ வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும். மாதச் சம்பளம் மட்டும் வாங்கி நீ ஒருபோதும் பெரியவனாக முடியாது" என்று அவனை உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் தொழில் நடத்துவதில் ஏற்படக்கூடிய லாப நஷ்டங்களை சொல்லாமல் நிறைகளை மட்டுமே சொன்னார்கள். கதிரவனின் முதலாளியாகும் எண்ணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.

    நண்பர்களின் இலவச அறிவுரைகளால் கதிரவனுக்கும் முதலாளி ஆகும் ஆசை வந்தது. நண்பர்களே அவனுக்கு ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். நல்ல நண்பர்கள் ஒருபோதும் தன் நண்பர்களுக்கு இடைஞ்சல் தரும் எதையும் செய்ய மாட்டார்கள். கதிரவனைச் சுற்றி இருந்த நண்பர்கள் தங்களின் ஆதாயத்திற்காகச் சொன்ன சில ஆலோசனைகளை கதிரவன் அப்படியே நம்பி அவர்கள் சொல் கேட்டான். தொழில் தொடங்குவது பற்றி தன் மனைவியிடம் ஒருபோதும் கதிரவன் கலந்தாலோசிக்கவில்லை.

    தொழில் தொடங்க முதலீட்டுக்கு சில லட்சங்கள் தேவைப்பட்டது. மனைவியின் நகைகளை விற்று கொஞ்சம் பணம் சேர்த்தான். பற்றாக்குறைக்கு அவனுடைய நண்பர்கள் சொன்ன இடத்தில் வட்டிக்குக் கடன் வாங்கினான். அனுபவம் இல்லாத தொழில் ஒன்றைத் தொடங்கினான். முதலில் ஓரளவுக்கு வருமானம் வந்தது. நண்பர்கள் சேர்ந்து கொண்டனர். செலவுகளும் அதிகமானது.

    ஆரம்பத்தில் அவனுக்கு கை கொடுத்த அந்தத் தொழில் இரண்டு வருடங்களாகப் பெருத்த நஷ்டத்தையே கொடுத்தது. போலியான நண்பர்கள் அவனை விட்டு விலகினர். அவன் வேலைக்குச் சென்று மாதச் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்திய பொழுது கிடைத்த நிம்மதி இப்பொழுது அவனிடமிருந்து பறிபோனது. வீட்டிற்கும் வாடகை கொடுக்க முடியாத நிலைமை. பல மாதங்களாக வீட்டு வாடகை பாக்கி இருப்பதால் வீட்டு உரிமையாளரும் அவனை நெருக்கிக் கொண்டிருந்தார். வாங்கிய கடனுக்கு வட்டி கூடக் கொடுக்க முடியாத நிலைமை. கடன் சுமையையும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையையும் இறக்கி வைப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். கடன் வட்டியும் முதலுமாக பத்து லட்சத்தைத் தாண்டியது. கடன் கொடுத்தவர் கதிரவனை நெருக்கிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று மாத காலமாக எவ்வளவோ சாக்குபோக்குச் சொல்லிச் சமாளித்தான்.

    கடன் கொடுத்தவர் இப்பொழுது விடுவதாக இல்லை. "இன்னும் ஒரு வாரத்திற்குள் பணத்திற்கு வழி செய்யவில்லையென்றால் வீட்டிற்கு வந்து கத்துவேன். வழக்குப் போட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் ஜெயிலுக்கு அனுப்புவேன்" என்று எச்சரித்தது இன்னும் கண் முன்னே நின்று கொண்டே இருந்தது.

    அந்த நினைப்பே சட்டென்று உள்ளே ஆழமான வலியை ஏற்படுத்தியது. உறக்கம் கொள்ள முடியாத வலி. தன்னையும் மறந்து தூங்கினாலும் எழுந்தவுடன் தொடரும் வலி. ஒரு வாரமாகச் சரியான தூக்கமும் சாப்பாடும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

    பொ.வைரமணி

    கடன் கொடுத்தவர் கெடு முடிந்தது. நாளை காலை கடன் கொடுத்தவர் நிச்சயம் வீட்டுக்கு வந்து கடனைக் கேட்டு சத்தம் போடுவார். அப்படி அவர் வீட்டிற்கு வந்து கத்தினால் மானம் மரியாதை எல்லாம் பறி போய்விடும். வெளியில் எப்படித் தலை காட்டுவது? குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அசிங்கமாகப் போய் விடுமே! எப்படி சமாளிக்கப் போகிறேன் தெரியவில்லையே? தூக்கம் இன்றி தவித்துக் கிடந்தான் கதிரவன்.

    குழப்பத்தில் இருந்தவனுக்கு அறிவு புரண்டது. உணர்வு குலைந்து போனது. கலங்கி? போயிருந்த அவனுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒரு வழி தான் தெரிந்தது. குடும்பத்தோடு விஷம் குடித்துச் சாவது ஒன்றே வழி என்ற முடிவுக்கு வந்தான். அன்று காலை வெளியே சென்றவன் இரவு வீட்டிற்கு திரும்பினான்.

    தனக்கும், மகன், மகள், மனைவி, ஆகியோருக்கும் ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வந்தான். அதில் கலந்து சாப்பிடுவதற்கு விஷப்பாட்டிலையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

    வீட்டிற்கு வந்தவன் மகனையும், மகளையும் அருகே உட்கார வைத்துக் கண்கள் கலங்கப் பேசினான்.

    "குடும்பத்தோடு விசம் குடிச்சு சாவது ஒன்றே வழி. மானத்தக் காப்பாத்த இதத் தவிர எனக்கு வேற ஒண்ணும் தெரியல. தயவு செஞ்சு என் பேச்சக் கேளுங்க. என்னை மன்னிச்சிருங்க" என்று கதறினான்.

    அவனுடைய முடிவை அவனுடைய மனைவியும் கண்ணீரோடு ஏற்றுக்கொண்டாள்.

    இருந்தாலும் அவளுடைய உள் மனது பிள்ளைகளை நினைத்து துடித்தது. எந்தத் தவறும் செய்யாமல் இந்த சின்ன வயதிலேயே ஏதுமறியாமல் இந்தப் பிள்ளைகளும் சாகப் போகிறதே என்று நினைத்து வேதனைப்பட்டாள். கண்ணீரோடு மகனையும் மகளையும் கட்டி அணைத்தபடி அழுது கொண்டிருந்தாள்.

    கதிரவன் தன் பிள்ளைகள் இருவரிடமும் கடன் தொல்லையிலிருந்து விடுபட இது ஒன்றுதான் வழி. நாம நாலு பேரும் குடும்பத்தோடு விஷம் குடித்துச் சாவோம் என்று சொல்லியதை கேட்டதும் அவனுடைய பதினேழு வயது மகள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

    "ஏம்பா இது மாதிரி சாகுறது தான் உங்க முடிவா?"

    "ஆமாம்மா. இத விட்டா எனக்கு வேற வழி தெரியல. நாளைக்குக் காலையில விடிஞ்சதும் கடன்காரன் வந்தா நம்ம மானம் மரியாத எல்லாம் கெட்டுப் போகும்" "வியாபாரத்துல உங்களுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நாங்களும் அம்மாவும் எப்படிப்பா பொறுப்பாக முடியும்? தொழில் எப்படி நஷ்டமானது? என்ன செய்தீர்கள்? அப்படின்னு கூட எங்களுக்கு தெரியாதே அப்பா! நாங்க மூணு பேரும் ஏம்பா விஷம் குடிச்சு சாகனும்? இது நியாயமாப்பா? கடனைத் திருப்பிக் கொடுக்காம சாவுறது கடன்காரர்களுக்கு நீங்க செய்யுற பெருத்த துரோகம் இல்லையா?"

    "அவ்வளவு பெருந்தொகைய நா எப்படிப் புரட்ட முடியும்?" என்றான் கதிரவன்.

    "ஏம்பா முடியாது? தொழில மூடுங்க. ஏதாவது வேலைக்குப் போங்க. அம்மாவையும் ஏதாவது வீட்டு வேலைக்கு அனுப்புங்க. எல்லோருமாச் சேர்ந்து கஷ்டப்படுவோம். உழைப்போம். மானம் மரியாதையைக் காப்பாத்தணும்னா நேர்மையா ஏதாவது ஒரு வேல செஞ்சு கடனக் கட்டலாமே! மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் தந்துடுறேன்னு கடன் கொடுத்தவர்கிட்ட அவகாசம் கேட்டிருக்கலாமே! தொழிலில் நஷ்டம்னா வேல செஞ்சு கொடுக்கலாமேப்பா! நீங்க சொல்லுற இழப்பு பத்து லட்சம் வெறும் நம்பர்ல ஏற்பட்ட இழப்புப்பா. அத மீண்டும் எப்படியும் சம்பாதிக்க முடியும். ஆனா நம் வீட்டு மெம்பரை இழந்துட்டா அத எப்படிச் சம்பாதிப்பது? போனா போனதுதானேப்பா"கதிரவனின் மகள் உருக்கமாகச் சொன்னாள்.

    "அதெல்லாம் முடியாதும்மா. இனி எங்கே வேல கெடைக்கப் போகுது?" என்று விரக்தியில் சொன்னான்.

    "அப்படின்னா நீங்க செத்துப்போங்கப்பா. எங்க மூணு பேரையும் ஏன் விஷம் குடிக்கச் சொல்லி வற்புறுத்துறீங்க. நீங்க பண்ணுன தப்புக்கு வாழ வேண்டிய நாங்க ஏன் சாகணும்?" கதிரவனின் மகள் சற்று கோபமாகவே பேசினாள்.

    "கடன்காரன் உங்களைச் சும்மா விட மாட்டான். துன்புறுத்துவான்" என்று கதிரவன் விரலை நீட்டிச் சொன்னான்.

    "நீங்க கடன் வாங்கினீங்க. தொழில் தொடங்குறத பத்தி அம்மாக்கிட்ட கூட ஒரு வார்த்த நீங்க கேட்கல.யார் யாரோ சொல்றாங்கன்னு அவங்க சுயநலத்துக்காக சொன்ன தொழில நீங்க ஆரம்பிச்சிங்க. உங்களோட கவன குறைவுல பணத்தை இழந்தீங்க. இதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்?"

    "நீ சின்ன புள்ள தானே. நா சொல்லுறது உனக்குப் புரியாது. கடன்காரன் இதையெல்லாம் பாக்க மாட்டான். குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் தான் நெருக்குவான்" என்று கதிரவன் தன் மகளைப் பார்த்துச் சொன்னான்.

    "அப்படி ஒரு நெலம வந்தா உங்கள் கடனை நா ஏத்துக்குறேன்ப்பா. இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் ஏதாவது ஒரு கடையிலாவது வேல செஞ்சு எத்தனை வருஷமானாலும் கடனை நா அடைக்கிறேன். கடன் கொடுத்தவரிடம் நா கெஞ்சி மன்றாடி அவகாசம் கேட்டுக்குறேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமாப்பா? வாழ முடியலையே அப்படின்னு எந்த ஒரு பறவையும் எந்த ஒரு விலங்கும் தற்கொலை பண்ணிக்கிறதில்ல. எல்லாம் தெரிஞ்ச மனுஷன் தான் தற்கொலைங்கிற முடிவுக்குப் போறான். நீங்க வேணும்னா செத்துப் போங்கப்பா. நானாவது இவ்வளவு தூரம் உங்கக்கிட்ட இதப் பத்திச் சொல்றேன். தம்பியப் பாருங்க பாவம் அவனுக்கு விஷயம் என்னான்னு கூட தெரியாம முழிக்கிறான். எங்கள கட்டாயப்படுத்தாதீங்கப்பா" என்று கண்கள் கலங்க கதிரவனின் மகள் சொன்னாள்.

    "மறுபடியும் சொல்றேன். நீ சின்னப் புள்ளத் தனமாத்தான் பேசுற"

    "எதுப்பா சின்னப் புள்ளத்தனம்? நா சின்ன புள்ளையா இருந்தாலும் எனக்கு மனசுல தைரியம் இருக்கு. நா கோழை இல்ல. மனசுல உரம் உள்ளவங்க வீழ்ச்சி அடைஞ்சாலும் தரையில தூக்கி வீசினாலும் சுவத்துல எறிஞ்ச பந்து மாதிரி மீண்டும் மீண்டும் எந்திருச்சு வருவாங்க. கோழைகள்தாம்பா தரையில உருட்டி விட்ட கல்லைப் போல விழுந்து கெடப்பாங்க. உங்களுக்கு மனசுல உரம் இல்ல. நீங்க வேண்டுமானால் செத்துப் போங்க. எங்கள விஷம் குடிக்கச் சொல்லி வற்புறுத்தாதீங்க" ஆத்திரத்தோடும் அழுகையோடும் அவனுடைய மகள் பேசினாள்.

    மகள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரவனுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது. அவர்கள் மூன்று பேரையும் சில வினாடிகள் கண்களைச் சிமிட்டாமல் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அவன் அவர்களிடம் எதுவும் பேசவில்லை. விஷப் பாட்டிலைக் கையில் எடுத்துக் கொண்டான். விறுவிறுவென்று கொல்லைப் பக்கம் சென்றான். அருகேயிருந்த மண்வெட்டியை எடுத்துப் பள்ளம் தோண்டினான். விஷப்பாட்டிலை திறந்து அதிலிருந்த விஷத்தை ஊற்றி மண்ணைத் தள்ளிப் புதைத்து விட்டு வீட்டிற்குள் வந்தான். வந்தவன் தீர்க்கமான தெளிவான முகத்துடன் மிகவும் கம்பீரமாகச் செல்போனை எடுத்துத் தனக்குக் கடன் கொடுத்தவரை அழைத்தான்.

    Next Story
    ×