என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சிறப்புக் கட்டுரைகள்
![உசுரே நீ தானே! அத்தியாயம்- 18 உசுரே நீ தானே! அத்தியாயம்- 18](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9267366-usurenee.webp)
உசுரே நீ தானே! அத்தியாயம்- 18
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- டேவிட் குழப்பமாய் அவனை பார்த்தான்.
- நண்பர்கள் தியாகு, நெல்சன், செந்திலிடம் மெசேஜை காட்டியபின் டேவிட் கேட்டான்.
போலீஸ் ஸ்டேஷன் போன் அடிக்க, ஏதோ பைலை பார்த்துக்கொண்டு இருந்த ஏட்டையா எடுத்து பேசினார்.
காத்திருந்த டேவிட், பெருமாள் உள்பட அனைவரும் பதட்டமாய் அவரையே பார்த்தனர்.
"ஓ.கே. ஐயா... சரிங்க ஐயா... அப்படியே செய்யுறன் ஐயா..." எனக்கூறி ரிசிவரை வைத்தார். பின் இவர்களை பார்த்தார்.
"கல்லல் கிராம பார்டர்லதான் இன்ஸ்பெக்டர் ஐயா நிக்குராராம். விசாரணை போய்கிட்டு இருக்குதாம். ஏதாவது முக்கிய தகவல் கிடைச்சா சொல்றன்னு, சொல்லச் சொன்னாரு... சொல்லிவிட்டு திடும்பவும் பைல்களுக்குள் முகத்தை நுழைத்தார் அவர்.
"டேவிட் ஒரு நிமிஷம்!"
டேவிட்டை தனியே அழைத்து சென்ற பெருமாள். எதோ கூறிவிட்டு தன் காரை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் இருந்து கிளம்பி சென்றான். அவன் போவதையே பார்த்தபடி டேவிட் நிற்க. அவனருகில் வந்த நண்பன் தியாகு கேட்டான்..
"இவன் எங்கடா போறான்...?"
"இனிமே பொறுக்க முடியாது... நான் போயி கட்சிக்காரங்களை கூட்டிட்டு கல்லல் பார்டருக்கு போறன்னு சொல்லிட்டு போறான்."
"இந்த ஊர்ல போயி, எந்த கட்சிக்காரனை கூப்பிட போறானாம் இவன்?" - செந்தில் நக்கலாய் கேட்டான்.
"ஏம்பா... அவன் கட்சிக்காரங்களுக்கு போன் பண்ணா அவங்கல்ல முக்கியமானவங்க வரப் போறாங்க... தவிர லோக்கல்ல உள்ள கட்சிக்காரங்களுக்கும் தகவல் சொல்லவாங்க. இப்படி எல்லாம் 'பிரஷர்' போட்டாத்தான் திவ்யாவ கண்டுபிடிக்க போலீஸ், கொஞ்சம் வேகம் காட்டுவாங்க..." - ரங்கராஜன், தன் மகன் பெருமாள் செய்வது சரி என்ற தோரணையில் பேசினார்.
"எல்லோரும் பெருமாளை நம்புறாங்க... எனக்கு என்னவோ இந்த 'திவ்யா கடத்தல்'ல அவன் கள்ள ஆட்டம் ஆடுறானோன்னு தோணுது..." - நெல்சன் கிசுகிசுப்பாய் டேவிட்டிடம் சொல்ல, டேவிட் குழப்பமாய் அவனை பார்த்தான்.
"இப்போ... நாம் என்னப்பா பண்ணப் போறாம்...?" டேவிட்டின் அம்மா லிசா கேட்டாள்.
"நாமளும் கிளம்பி அந்த இடத்திற்கு போவோமா...?" என திவ்யா அம்மா ராஜேஸ்வரி ஈனஸ்வரமாய் கேட்டாள். ராஜேஸ்வரி இப்படி கேட்டதும், ஸ்டேஷனில் பைல் பார்த்துக் கொண்டிருந்த, ஏட்டு சடாரென்று நிமிர்ந்தார்.
"யம்மா... நான் தான் சொன்னேன்ல... இன்ஸ்பெக்டர் ஐயா கிட்ட இருந்து, அடுத்த போன் வர்ர வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க... பெண்ணை பெத்த உங்க வலி எங்களுக்கும் புரியுது. கொஞ்சம் போலீஸ் கூட ஒத்துழைங்க..."
அவரது குரலில் இருந்த கனிவான உத்தரவில் அனைவரும் காத்து இருப்பதை தவிர, வேறு வழி இல்லை என முடிவு செய்த சமயம்...
திவ்யா இருந்த அறையின் விளக்குகள் எரிந்தன. திடீர் வெளிச்சத்தில், திவ்யா எதிரில், நின்ற அவனையும், கூட நின்ற மற்ற நால்வரையும் கண்கள் கூச பார்த்தாள்.
![இயக்குநர் A. ெவங்கடேஷ்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9267428-directorvenkatesh.webp)
இயக்குநர் A. ெவங்கடேஷ்
மாஸ்க் அணிந்த அவனை தவிர இரு ஆண்கள். மற்ற இருவரும் பெண்கள். அவன் கண்களை இதற்கு முன்பு பார்த்ததாய் திவ்யாவுக்கு தோன்றியது. அவனைத் தவிர மற்றவர்கள் இருவரும் மத்திய வயது தோற்றம். பெண்களில் ஒருத்திக்கு ஒரு 27 வயதும், இன்னொருத்திக்கு 40 வயதும் இருக்கும்!
"என்னை கடத்தியது இவர்களா? என்னை கடத்தியதில் பெண்களுக்கு என்ன பங்கு" திவ்யா யோசிக்கும்போது, நடு நாயகமாய் நின்று இருந்த அந்த மாஸ்க் முகமூடி அணிந்து இருந்தவன் கையில் ஒரு கட்டிங் பிளேடை எடுத்தபடி, திரும்பி சிரித்தபடி மற்றவர்களிடம் கேட்டான் - கரகரப்பு குரலில்.
"கட் பண்ணிடலாமா?" - பயத்தில் திவ்யா கட்டிப்போட்டு இருந்த தன் கை விரல்களை மடக்கினாள்.
அந்த ரோடு வலது, இடதாய் ரெண்டாக பிரிந்தது. ஜீப்பில் இருந்த அழகர் கேட்டார். "சிம் கார்டை கட் பண்ணி வீசிவிட்டு, அந்தப் பொண்ணோட கல்லல் பார்டர் ரோட்ல இருந்து இந்தப் பக்கம்தான் வந்து இருக்கணும். அவனுங்க திவ்யாவோட வந்த கார், ஒன்னு இடதுபுறம் 'முருகநத்தம்' ரோட்ல போயிருக்க ணும்... இல்ல... வலது பக்கம் 'பண்ணையார்' பட்டி ரோட்ல போயிருக்கணும்... ம்...!"
அவர் யோசிக்க... "சார்... முருகநத்தம் போய் பார்க்கலாம் சார்... அங்க வெறும் காடு தான். ஒரு பழைய முருகன் கோவிலும், வேட்டைக்காரன் பங்களான்னு ஒரு பழைய இடிஞ்ச வீட்டைத் தவிர, ஆட்கள் யாரும் கிடையாது. முருகன் கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டின்னு எப்பவாவதுதான் ஜனங்க போவாங்க..." கான்ஸ்டபிள் மணி தைரியமாக சொன்னார்.
"அதனால... இப்படித்தான் திவ்யாவ கடத்தனவன் கார் போயிருக்கும்கிறியா?"
"ஆமா சார்... ஆள் நடமாட்டம் இல்லாத இடமா போகத்தானே பார்ப்பாங்க..."
"தப்பு... ஜனங்க நடமாடுற இடத்துல போனாதான் போய்... வர்ர காருங்கள்ல, நம்ம கார் தனியா தெரியாதுன்னு, கடத்துனவன் கணக்கு போடுவான் இல்லியா..." கான்ஸ்டபிள் பதில் பேசவில்லை.
"யோவ் டிரைவர்... வண்டிய வலதுபக்கம் விடு... அங்க போயி விசாரிச்சிட்டு... அப்புறம் முருகநத்தம் பாக்கலாம்..." அழகரின் சொல்லுக்கு, டிரைவர் வண்டியை வலதுபுறம் திருப்ப, தொங்கிய முகத்துடன் கான்ஸ்டபிள் தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்தார். அழகர் பார்க்காதவாறு, தன் அருகில் அமர்ந்திருக்கும், மற்ற கான்ஸ்டபிள்ஸ்க்கும் தெரியாதவாறு, யாருக்கோ மெசேஜ் டைப் செய்தார்.
"என்ன இது... காதுல ஒத்த ஜிமிக்கி மட்டும் தொங்குது...?" அந்த மாஸ்க் அணிந்தவன், கட்டிப் போட்டிருந்த தன் சேர் அருகில் வந்து, பேசும்போது, மீண்டும் அந்த கண்களை கூர்ந்து கவனித்தாள், திவ்யா.
"இந்த கண்களை இதுக்கு முன்பு, எங்கேயோ பார்த்து இருக்கேனே...!" யோசிக்க, யோசிக்க எங்கே? என நினைவு வரவில்லை.
"ஏய் மீனா... அந்த ஒத்த ஜிமிக்கிய கழட்டிடு..." அவன் கூட வந்த இரு பெண்களில் ஒருத்தி, அவள் வலது காதில் கிடந்த ஒத்த ஜிமிக்கியை கழட்டி அவனிடம் கொடுத்தாள்.
அதை கையில் வாங்கி, கனத்தை சின்னதாய் தூக்கி போட்டு பார்த்து "1 1/2 பவுன் இருக்கும் போலியே... இன்னொரு 1 1/2 பவுன் ஜிமிக்கி, "பசங்க வண்டி மாத்தி வண்டி ஷிப்ட் பண்ணி கொண்டு வரும்போது தவறிபோயிருக்கும்..."
"திவ்யா ஏதோ சொல்ல முயல, ஆனால் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருந்ததால் ம்.... ம்...க்கம் என சத்தம் மட்டுமே அவளிடம் இருந்து வெளிப்பட்டது. "
"ஓ... யாருடா நீன்னு கேட்குறியா? அதான் என் பேரு நல்லவன்... உன்னை கடத்தி இருக்கிற ஒரு கெட்டவன்..." திவ்யா கண்கள் விரித்து பார்த்தாள்.
"எதுக்காகடா கடத்தி இருக்கிறன்னு உன் கண்ணால கேட்குற... சரியா? திவ்யா ஆமா என்பதுபோல் தலையாட்டினாள்.
எல்லாத்தையும் உடனே சொல்லிட்டா, சப்புனு இருக்கும். முதல்ல கட் பண்ணிடுறேன். அதை பார்சல்ல அனுப்பிட்டு கட் பண்ண வலி போற வரைக்கும் டீட்டையிலா சொல்றன்..." கட்டிங் பிளேடுடன் அவளை நோக்கி செல்ல, அந்த பெண்கள் இருவரும், கூடவே வந்த மற்ற இரு ஆண்களும் குரூரமாக சிரித்தார்கள்,
போலீஸ் ஸ்டேஷன்..
தனது செல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்தான் டேவிட்.
'சார்... இன்ஸ்பெக்டர் பண்ணையார்பட்டிக்கு போறாரு... எனக்கென்னவோ... முருகநத்தம் போய் தேடணும்னு தோணுது. உடனே போங்க! லொக்கேஷன் ஷேர் பண்றேன். நான் அனுப்பின லொக்கேஷன்ல இருந்து இடதுபுறம், 30-வது கிலோ மீட்டர் முருகநத்தம். கான்ஸ்டபிள் முருகன்போலீஸ் ஸ்டேஷன் வந்ததில் இருந்து, அவர்கள் மீது கருணையும், அக்கறையும் கொண்டு அவ்வப்போது தண்ணீர், காபி தந்ததோடு, ஆறுதல் வார்த்தைகளையும்தான் தந்தவர் இந்த கான்ஸ்டபிள் முருகன். இன்ஸ்பெக்டரோடு போனவர்தான் அந்த மெசேஜை அனுப்பி இருக்கிறார். தன் நண்பர்கள் தியாகு, நெல்சன், செந்திலிடம் மெசேஜை காட்டியபின் டேவிட் கேட்டான்..
"இப்ப என்னடா பண்ணலாம்...?"
"மாப்ள... நாம நாலு பேரு மட்டும் கிளம்புவோம்... உன் அம்மா, அப்பா திவ்யாவோட அம்மா, அப்பா மேரியோட இங்க ஸ்டேஷன்ல இருக்கட்டும்..." நெல்சன் சொன்னான்.
"நோ... செந்தில்..." மேரி குறுக்கிட்டாள்.
"திவ்யாவ நானும் பாக்கணும்... அவ கிடைச்சவுடனே ஆறுதல் சொல்ல ஒரு பொண்ணா நான் இருந்தா அவளுக்கு ஒரு ரிலீப் இருக்கும்!"
"அதுக்கு அவ நமக்கு கிடைக்கணுமே..." ஆதங்கமாய் கூறினான் செந்தில்.
"ஏய்... யப்பா... டிஸ்கஸ் பண்ண நேரமில்லை! வயசானவங்க நாலு பேரு ஸ்டேஷன்ல இருக்கட்டும்... நாம கிளம்பலாம்... வாங்க..." தியாகு துரிதப்படுத்தினான்.
தன் அப்பாவிடம் வந்த டேவிட், "அப்பா... அம்மா, மாமா, அத்தையோட அங்க இருங்க... அப்பப்போ போன்ல தகவல் சொல்றேன்... இங்க ஸ்டேஷன்ல ஏதாவது திவ்யாவ பத்தி அப்டேட் கிடைச்சாலும் எனக்கு சொல்லுங்க... நாங்க முருகநத்தம்-ங்கிற ஊருக்கு போறோம்... கவலைப்படாதீங்க... திவ்யாவோடதான் வருவோம்..." ஆறுதல் படுத்திவிட்டு, டேவிட் கிளம்ப அவர்கள் நால்வரும் கவலை தோய்ந்த முகத்துடன் தலையாட்டினார்கள்.
எஸ்.பி ஆபீஸ், மதுரை.
கட்சிக்காரர்கள் பத்து பேருடன் பெருமாள் காத்து கொண்டு இருந்தான். தன் தங்கை திவ்யாவை தேடித்தருவதில் போலீஸ் தாமதமும், மெத்தனப்போக்கும் காட்டுவதாய் புகார் மனு எழுதி, கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து தன் பவரை காட்ட காத்திருந்தான்.
"பெருமாள்..." அழைக்கப்பட, மொத்த பேருமாய் உள்ளே நுழைந்தனர்.
"வணக்கம் சார்..." கம்பீர மீசையுடன் ஐந்து, ஆறு ஆபிசர்களுடன் புடைசூழ அமர்ந்திருந்த எஸ்.பி பார்த்ததும், தானாக மரியாதை வெளிப்பட்டது.
"ஆங்..." தலையாட்டிய எஸ்.பி. மொத்த பேரையும் பார்த்து, "இவ்வளவு பேரா...? பாதி பேரு வெளியே இருக்கலாமே... பிளீஸ்..." அவரது கோரிக்கையின் கண்டிப்பை உணர்ந்து கட்டுப்பட்டனர். மெருமாள் தந்த புகார் மனுவை வாங்கி உன்னிப்பாக படித்து பார்த்தார். "அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேரு அழகர். அவரு எப்படி?" என தன் அருகில் நின்ற ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்டார். அவர் குனிந்து அவர் காதில் கிசுகிசுத்தார். "ஓ... சரி... அவரை போன்ல கூப்பிடுங்க..." கிசுகிசுத்த ஆபிசரிடம் உத்தரவு போட்டு,
பெருமாளை பார்த்த எஸ்.பி.
"அந்த அழகர் மேல் நல்ல அபிப்பிராயம் டிபார்ட்மெண்டல இல்ல. ரெண்டு மெமோ ஏற்கெனவே வாங்கி இருக்காரு... விசாரிச்சுடலாம்... டோண்ட் ஒர்ரி..."
சொல்லிக் கொண்டு இருக்கும்போதே "ஐயா... இன்ஸ்பெக்டர் அழகர் லைன்ல இருக்காரு..."
அந்த ஆபிசர் கொடுத்த போனை வாங்கி, காதுக்கு கொடுத்தார் எஸ்.பி.
(தொடரும்)
E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353