search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்... தாய்மையை உணர்ந்தேன்!
    X

    மீனா மலரும் நினைவுகள்... தாய்மையை உணர்ந்தேன்!

    • ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஏதாவது மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும்.
    • தம்பிககோட்டை படம் முடிந்ததும் ஓய்வுதான்.

    திருமணமாகி விட்டது. இனி நாம் நடிக்கணுமா? வேண்டாமா? நடித்தால் எடுபடுமா? ஒருவேளை அம்மா வேடம் தந்தால என்ன செய்வது? அது சரிப்பட்டு வருமா? என்று மனதில் ஏகப்பட்ட குழப்பம். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன்.

    அப்போதும் சாகரிடம்தான் 'அட்வைஸ்' கேட்டேன். அவர் 'நீ நடி என்றோ அல்லது நடிக்காதே என்றோ சொல்ல மாட்டேன். உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய். இதில் முடிவெடுப்பதில் உனக்கு என்ன குழப்பம்? என்று சாதாரணமாக சொல்லி விட்டார்.

    அவர் சாதாரணமாக சொல்லி விட்டார். ஆனால் என் குழப்பம் எனக்குத் தானே தெரியும்? அம்மா, அத்தை வேடங்களில் நடிக்க நான் விரும்பியது கிடையாது. அப்படி ஏதாவது வேடங்கள் வந்தால் என்ன செய்வது? என்றெல்லாம் மனதில் நினைக்க தோன்றியது. இந்த நிலையில் திருமணமான மறு ஆண்டே 'தம்பிக்கோட்டை' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதையை கேட்டேன். பிடித்து இருந்தது. சண்முகப் பிரியா என்ற பாத்திரம் எனக்கு. அவரும் நடிப்பதற்கு தடை போடாததால் தம்பிக்கோட்டையில் நடிக்க வருகிறேன் என்றேன். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஏதாவது மறக்க முடியாத அனுபவங்கள் இருக்கும்.

    அந்த வகையில் தம்பிக்கோட்டையில் நடித்த போதுதான் வாழ்க்கையின் சுகமான அனுபவம் கிடைத்தது. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து மகிழ்ந்தேன்.

    கோவில் நகரமான கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போதுதான் நான் கர்ப்பம் அடைந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதை கேள்விப் பட்டதும் அப்படி ஒரு சந்தோசம். அதன் பிறகு பிறக்கப் போகும் குழந்தை மீது கவனம் திரும்பியது. குழந்தையை வயிற்றில் சுமந்த ஒவ்வொரு நாளும் சந்தோசமான உணர்வுகள்.

    எத்தனையோ படங்களில் திருமணத்துக்கு முன்பு கர்ப்பிணி வேடத்தில் உணர்வுப் பூர்வமாக நடித்து இருக்கிறேன். ஆனால் இப்போது தான் நிஜத்தில் அந்த உணர்வை உணர்ந்தேன். ரசித்தேன். கர்ப்பிணியாக இருக்கிறேன் என்று அறிந்ததும் நடக்கவே பயப்பட்டேன். மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகுதான் அந்த பயம் நீங்கியது. படத்தில் கர்ப்பிணியாக நடித்ததற்கும் நிஜத்தில் கர்ப்பிணியாக வாழ்ந்ததற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

    கர்ப்பமாக இருக்கும் போது புளிப்பு பிடிக்குமே என்றார்கள். எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இனிப்பு சாப்பிடாதே என்பார்கள். ஆனால் இனிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். கர்ப்பிணியாக இருந்ததால் புதிதாக எதையும் சாப்பிடவெல்லாம் ஆசை வரவில்லை. 'சலாடு'தான் சாப்பிடுவேன். அது எப்பவுமே நான் சாப்பிடுவதுதான். ஆனால் மனதுக்குள் ஒருவிதமான பயம் இருந்தது.

    தம்பிககோட்டை படம் முடிந்ததும் ஓய்வுதான். நான், என் கணவர் என்பதையும் தாண்டி, அம்மா, அப்பா மற்றும் மாமியார் வீட்டை சேர்ந்த எல்லோருக்கும் வரப்போகும் புதிய வாரிசை நினைத்து சந்தோசம்... எதிர்பார்ப்பு....

    எல்லோருமே அவ்வப்போது போன் பண்ணி அக்கறையோடு ஏகப்பட்ட ஆலோசனைகள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

    மாதங்கள் உருண்டது. வயிறும் பெரிதாகி கொண்டே வந்தது. நிறைமாத கர்ப்பிணியானேன். அப்போது பழைய நினைவு வந்தது. படத்தில் கர்ப்பிணியாக நடிக்கும் காட்சி. வயிறு வலியால் இடுப்பை பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டிய காட்சி.

    நானும் வயிறு வலிதானே என்று இடுப்புக்கு பதில் வயிற்றை பிடித்து கொள்வேன். அதை பார்த்து டைரக்டர் சிரித்து விட்டார். 'ஏம்மா... கர்ப்பிணி வயிறு வலி என்றால் இடுப்பை பிடிக்க வேண்டும்' என்று சொல்லித் தந்தார்.

    உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தபோது லேசாக வயிறு வலித்தாலும் என்னையும் அறியாமல் கை இடுப்புக்கு சென்றது. அடிக்கடி அதை நினைப்பேன். சிரிப்பேன்.

    புத்தாண்டு பிறந்தது. மகளையும் பெற்றெடுத்தேன். ஆம். 2011 ஜனவரி 1-ந்தேதிதான் பிரசவித்தேன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு அம்மாவாக உயர்ந்த உணர்ச்சி மிகுந்த தருணம். சாகருக்கும் குழந்தையை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம். நைனிகா என்று பெயர் சூட்டினோம். பெயர் சூட்டு விழாவை எங்கள் வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. அவள் நைனிகா என்ற பெயரில் எங்கள் வீட்டுக்கு வந்த மகாலெட்சுமி. திருமணம் ஒரு மகிழ்ச்சி என்றால் அதைத் தொடர்ந்து குழந்தையும் பிறந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தது எங்கள் குடும்பம்.

    குழந்தை பிறந்த மகிழ்ச்சியோடு அவளோடு தினமும் பொழுதை போக்குவது. அவளை பராமரிப்பது தான் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

    நைனிகாவுக்கு ஒரு வயது ஆனதும் குழந்தையுடன் நானும் சாகரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தோம்.

    நாங்கள் தரிசனம் செய்ய சென்ற நாளில் அங்கு மத்திய, மாநில மந்திரிகள் வந்திருந்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக கெடுபிடி அதிகமாக இருந்தது.

    நாங்கள் சென்ற காரை முன்வாசல் அருகே நிறுத்தி இருந்தோம். ஆனால் அந்த வழியாக செல்ல அனுமதித்ததால் குழந்தையுடன் பின் வாசல் வழியாக நடந்தே காருக்கு சென்றோம்.

    திருமண வாழ்க்கை தந்த மாற்றம்...

    அதை தொடர்ந்து குழந்தை பிறந்த மகிழ்ச்சி கொண்டட்டம். இப்படி அடுத்தடுத்து மகிழ்ச்சியான தருணங்களை சந்தித்து வந்தேன். மற்றொரு மகிழ்ச்சியான தருணத்தை அடுத்த வாரம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன். அதுவரை காத்திருங்கள்.

    (தொடரும்)...

    Next Story
    ×