search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உத்திராடம் நட்சத்திர பலன்கள்
    X

    உத்திராடம் நட்சத்திர பலன்கள்

    • எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும்.
    • மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும்.

    27 நட்சத்திரங்களில் 21-வது நட்சத்திரம் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம். இதன் சமஸ்கிருத பொருள் பிந்தைய வெற்றி. இதன் தமிழ் பெயர் கடைகுலம் என்பதாகும். இதன் உருவம் கட்டில்கால், விரிந்த நிலையில் உள்ள வில். யானைத் தந்தம்.

    உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும் 2, 3, 4-ம் பகுதி மகர ராசியில் அமைந்துள்ளது கால புருஷ லக்னம் மேஷம். தனுசு ஒன்பதாம் வீடாகும். மகரம் பத்தாம் வீடாகும். தனுசு ராசி அதிபதி குரு மகர ராசியின் அதிபதி சனி. கால புருஷ தத்துவப்படி இந்த அமைப்பு தர்மகர்மாதிபதி யோகமாகும்.

    உத்திரட்டாதி நட்சத்திர பொதுவான பலன்கள்:

    ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கவுரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர்.

    புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளும் திறமையும் உண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும். சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். அழகிய தோற்றப் பொழிவு நிறைந்தவர். தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கை உண்டு. அதிகார பதவிகள் தேடி வரும். பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்குவதில் வல்லவர்கள். அரசியல் ஆதாயம் உண்டு. நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயல் ஆற்றுவார்கள்.

    மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள்.

    பார்ப்பதற்கு கடுமையானவர்களாகத் தோன்றினாலும் கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சளைக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சனைகளை சந்திப்பார்கள். சிவ வழிபாட்டில் ஆர்வம் அதிகம்.

    கண் அளவு, கை அளவு என பார்த்த மாத்திரத்தில் எதையும் கணிக்கும் நிபுணத்துவம் உண்டு. தண்ணீர் இல்லாத காட்டையும் விலை பேசும் தந்திரவாதிகள். பல பிரபலங்கள் உத்திராடமத்தில் பிறந்துள்ளனர். அவர்கள் இந்த நட்சத்திரத்துடன் தொடர்புடைய உறுதியான மற்றும் லட்சிய குணங்களை வெளிப்படுத்தி, அந்தந்த துறைகளில் பெரும் வெற்றியையும் அங்கீகாரத்தையும் அடைந்துள்ளனர்.

    கல்வி

    நல்ல கல்வி அறிவு உண்டு. கற்ற கல்வியால் பயன் உண்டு. இதில் பிறந்தவர்கள் நிர்வாகம், கல்வி, மருத்துவம் தொடர்பான படிப்புகள், அரசியல் , வனம் காடு இயற்கை தொடர்பான கல்விகள், பி.பி.எம்., பி.பி.ஏ., எம்.பி.ஏ., ஐ.ஏ.எஸ். படிப்புகள், வக்கீல், நீதிபதி, புரோகிதர், குரு குல கல்வி, மத போதகர், வங்கி பணி, ஆச்சாரியர்கள் போன்ற கல்வி கற்கலாம். உயிரியல் கல்வி, மருத்துவம், குழந்தை மருத்துவம் தொடர்பான கல்வி மைக்ரோபயாலஜி , பொருளாதார நிபுணர், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படிப்புகள் படிக்கலாம்.

    தொழில்

    அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தியோகங்கள் அமையும். கதை, கவிதை கட்டுரை எழுதுவதில் அதிக ஈடுபாடு இருக்கும். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த் தலைமை போன்றவற்றில் கவுரவப் பதவி உண்டு.

    பெரும்பாலும் ஆசிரியர், வங்கிபணி, கல்வி நிறுவனம், ஜோதிடத்தில் புகழ் அடைவார்கள்.

    நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகளை வகிப்பவர்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் மூலம் கூட்டுத் தொழில், ஆதாயம் உண்டு. சிலர் அரசு அலுவலகங்களில் புரோக்கர் வேலை செய்வார்கள். பொருளாதார நிபுணர், வனத்துறை, நூலகர், விளையாட்டு துறை, பாதுகாப்பு பணி, உடற்பயிற்சி, நீதிபதி, ராணுவதுறை, ஊடகத்துறை, அரசு ஒப்பந்தம், கட்டுமானம், நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் போன்றவற்றில் மிளிர்கின்றனர்.

    தனம், வாக்கு, குடும்பஸ்தானம்

    சுய ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றால் தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள்.

    பேரதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். ராஜபோக வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் உண்டு. சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். கவுரவமான காதல் பின்னணி உள்ளவர்கள். சுருக்கமாக எந்த சூழ்நிலையிலும் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள்.

    மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு.

    சுய ஜாதகத்தில் சூரியன் அசுபத் தன்மையுடன் நின்றால் குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள். இளமையில் வறுமையுடன் வாழ்கிறார்கள்.

    மத்திம வயதிற்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. இந்த அமைப்பை பெற்ற பலர் குழந்தையின்மையால் அவதிப்படுகிறார்கள்.

    பலர் ஆன்ம பலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்கிறார்கள். பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைகிறார்கள்.

    எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். பிறர் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டுகலங்கும்போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாகஎடுத்துக் கொள்வார்கள்.

    தசா புத்தி பலன்கள்:

    சூரிய தசா:

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தவுடன் சூரிய தசா நடக்கும். இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 6 ஆண்டுகள்.

    ஜாதகர் பிறக்கும் போது தாய், தந்தை சுமாரான நிலையில் இருந்தாலும் உயர்வான நிலையை அடைவார்கள்.

    பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் வாழும் பாக்கியம் பெற்றவர்கள்.

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப கல்வி கற்கும் ஆர்வம் ஆரோக்கியமான தேகம் உண்டு.

    சந்திர தசா: இது இரண்டாவதாக வரக்கூடிய தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 10 ஆண்டுகள். ஜாதகருக்கு தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயம் உண்டு. அனைவராலும் விரும்பப்படக்கூடிய நபராக இருப்பர். விரும்பிய உணவும், நல்ல வேலைப்பாடுகள் நிறைந்த ஆடை, அணிகலங்களை அணிந்து அனுபவிக்கக்கூடியவராக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சியுடன், உடன் பிறப்புகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

    செவ்வாய் தசா:

    இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் வருடம் 7 ஆண்டுகள். பலர் கல்லூரி வாழ்க்கையை கடக்கும் காலகட்டம். புகழ் பெற்றவர்களாகவும் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.

    எல்லாம் எனக்குத் தெரியும் என்ற கர்வம் உண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று எந்த விசயத்திலும் தனித்து செயல்படுவார்கள். தங்கள் முயற்சியில் அடுத்தவர் தலையீட்டை விரும்ப மாட்டார்கள்.

    தன்னம்பிக்கையுடன் சீக்கிரமாக, அதுவும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் ஈடுபட்டு லாபம் அடைவார்கள்.

    ராகு தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேஷம தாரையின் தசாவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். விலகிச் சென்ற உறவுகள் இணைவார்கள். சொந்த வீடு, வாகனம் என ஸ்திர சொத்துக்கள் சேர்ந்து வாழ்வில் செட்டிலாகும் காலம். திட்டங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெறும்.

    சுய ஜாதகம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஒழுக்கம் சார்ந்த, காதல் சார்ந்த பிரச்சனைகளால் ஜாதகருக்கு அவமானம் உண்டு.

    குரு தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 16 ஆண்டுகள். தந்தைக்கு முன்னேற்றம் குறையும். அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். பூர்வீகச் சொத்து விரயமாகும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். சிலர் கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமான செலவு செய்வார்கள்.

    சனி தசா: இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19 ஆண்டுகள்.

    இது வயோதிக காலத்தில் வரக் கூடிய தசாவாகும். தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தாலும் திருமண வாழ்க்கை மன நிறைவு தருவதில்லை. வாழ்வின் பிற்பகுதியில் தம்பதிகளுக்குள் கவுரவ பிரச்சனையால் அன்யோன்யம் குறையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. எனினும் எதையும் வெளிப்படுத்தாமல் தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள்.

    உத்திரட்டாதி நட்சத்திர சிறப்புகள்.

    இது குரு மற்றும் சனியின் வீட்டை இணைக்கும் நட்சத்திரம்.

    ஒருவருடைய ஜாதகத்தில் குரு சனி சேர்க்கை இருந்தால் நல்ல உத்தியோகம் கிடைக்கும். எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கை அமையும். இந்த நட்சத்திரம் வரும் நாளில் விரதம் இருந்து ஐயப்பனை சங்கரநாராயணனை வழிபட நல்ல உத்தியோகம் தொழில் அமையும். குருவின் வீட்டையும் சனியின் வீட்டையும் இணைக்கும் இணைப்பு பாலமாக அமைந்த நட்சத்திரம். இதன் அதிபதி சூரியன் என்பதால் அரசாங்க பதவி ஏற்க, அரசு உதவிகளை நாட, முடிசூட்ட, பட்டாபிஷேகம் செய்ய, மதச் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய, ஆலய திருப்பணிகளை செய்ய, வீடுகளில் சங்கு ஸ்தாபனம், வாஸ்து சாந்தி, நவகிரக சாந்தி, பித்ரு சாந்திகள் செய்யலாம். கர்ப்பதானம், நிகேஷம் நடத்த, வீட்டிற்கு தேவையான மெத்தை, ஷோபா போன்ற ஆடம்பரப் பொருள்கள் வாங்கலாம். கிணறு வெட்ட உகந்த நாள்.

    நட்சத்திர பட்சி: வலியன்

    யோகம்: சித்தம்

    நவரத்தினம். மாணிக்கம்

    உடல் உறுப்பு: இடுப்பு

    திசை : வடக்கு

    பஞ்சபூதம் :காற்று

    அதிதேவதை: ஈஸ்வரன்

    நட்சத்திர மிருகம்: மலட்டுபசு

    நட்சத்திர வடிவம்: கட்டில்கால், மெத்தை

    சம்பத்து தாரை: திருவோணம், ரோகிணி, அஸ்தம்

    சேம தாரை : சதயம், திருவாதிரை, சுவாதி

    சாதக தாரை: உத்திரட்டாதி, பூசம், அனுஷம்

    பரம மிக்ர தாரை : பூராடம், பரணி, பூரம்.

    பொதுவான பரிகாரங்கள்:

    சரியான தொழிலோ அல்லது உத்தியோகமோ அமையாதவர்கள் கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலை போட்டு அம்மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டால் நிச்சயமாக நல்ல உத்தியோகம் கிடைக்கும். சபரிமலைக்கு செல்ல.. முடியாதவர்கள் இந்த நட்சத்திரத்தன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வழிபட வேண்டும்..

    தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    சூரியனின் ரத்தினமான மாணிக்கம் அணியலாம்.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் அல்லது பவுர்ணமி திதியில் சித்தர்களை ஜீவ சமாதியில் சென்று வழிபடலாம்.

    சாதக தாரையான உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்வதால் சுப பலன்களை அதிகரிக்க முடியும்.

    Next Story
    ×