என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
வாருங்கள்... கடலில் மிதப்போம்!- என்.சி. மோகன்தாஸ்
- பொதுவாய் நம்மூர் ஓட்டல், கல்யாணம் காட்சி என்றால் தட்டை கணக்கு பண்ணி கட்டணம் வசூலிப்பர். அங்கு அதற்கு நேர் வினோதம்.
- ஒரு முறை எடுத்த தட்டை திரும்ப உபயோகிக்க கூடாது. அடுத்தடுத்து புது தட்டுகளை தான் உபயோகிக்கணும்.
அமெரிக்கா என்பது அரசியல் அழிச்சாட்டியங்களை கடந்து "ஆ"...என வாய் பிளக்க வைக்கும் ஒரு வசீகரம்! கணினி துறையில் பணி பெற்று அங்கேயே ஆணி அடிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தவிர பொதுஜனத்திற்கு அது எட்டாக் கனி!
நீண்ட விசா அலைகழிப்பிற்கு பிறகு டூரிஸ்டாக செல்பவர்கள் பொதுவாய் பிரபல நகரங்கள், உல்லாச தலங்கள் என தங்கி சுற்றி பார்த்து, வியந்து, களைத்து அமெரிக்காவே அவ்ளோ தான் என ஊர் திரும்புவர்.
அமெரிக்கா என்றாலே சொகுசு - பணக்கார தேசம் என அறியப்படுகிறது. ஆனால் உள்ளே போனால் தான் உண்மை புரியும்.
நாம் காண்பதெல்லாம் செயற்கை! ஜிகினா வேலைகள்!
அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை முறையும் வெவ்வேறானவை.
ஏற்கனவே நான்கு முறை பயணித்திருந்தாலும் கூட இம்முறை தான் எனக்கு உண்மையான - உள்நாட்டு அமெரிக்காவை அலசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் ...
சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் மகளின் குடும்பத்தினருடன் நான்கு மாத வாசம்!
அக்டோபர் முதல் மார்ச் வரை அங்கே கடும் குளிர்! டெக்ஸாசில் நம்மூர் சீதோஷனம் என்பார்கள்.
ஆனால் இந்த வருடம் அங்கு மழையின் அடம்! குளிர்! வெளியே ஊர் சுற்றலாம் என்றால் பிற பகுதிகளில் மைனஸ் வரை போய் காலை எழுந்ததும் கனிவுடன் காரில் படிந்துள்ள ஐஸை வெட்டும் பரிதாபம்!
அதனால் ஒரு மாறுதலுக்காக குரூஸ் எனும் உல்லாச கப்பலை மாப்பிள்ளை தினேஷ் எனக்கும் மனைவிக்கும் முன்பதிவு செய்து இருந்தார்.
ஒரு வாரம்! நிஜமாலுமே அது உல்லாசம்! பிரமிப்பு! சொர்க்கலோகம் என்பார்களே அதே... அதே. அமெரிக்கா இருப்பதையும் காட்டும்-- இல்லாததையும் இருப்பதாக நீட்டும்!
அந்த வித்தை நம்மவர்களுக்கு தெரியாது- வராது.
நம் அருமை பெருமைகளை நாம் அறிவதில்லை. நமது பொக்கிஷங்களை உணர்வதில்லை. போற்றுவதில்லை. பாதுகாப்பதும் இல்லை.
ஆனால் அவர்களோ உலகத்தில் உள்ள அத்தனை விசேஷங்களையும் அமெரிக்காவில் கொட்டி வைத்திருக்கிறார்கள்.
கொட்டமடிக்கிறார்கள்... அடிக்க வைக்கிறார்கள்!.
அங்கே வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையான உழைப்பு .
அப்புறம் இரண்டு நாட்கள் பொழுதுபோக்கும் கடுமையான ஓட்டம்! அந்த பொழுது போக்கிற்காக நகரத்தில் என்னவெல்லாம் உள்ளனவோ அவ்வளவையும் அந்த கப்பலுக்குள்ளும் வடிவமைத்திருக்கிறார்கள்.
கப்பல் என்றால் சும்மா இல்லை--பிரம்மாண்டம்! அது ஒரு அதிசய உலகம்!
அரசியல்வாதிகள் சொல்வது போல 'ஊரை அடித்து உலையில் போடுவது போல - அங்கே கப்பலில் போட்டு மிதக்க வைத்திருக்கிறார்கள்!
கப்பல் முழுக்க ஏசி- அல்லது தேவை என்றால் கதகதப்பு.! தங்குவதற்கு ஏறக்குறைய 1200 அறைகள்! அதில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் சொகுசு.! .4000 த்துக்கும் மேற்பட்ட பயணிகள்! 1100 ஊழியர்கள்!
விசாலமான விளையாட்டு மைதானம்! வாட்டர் கேம்ஸ்! ஜிம்மேர ஜிம்! மசாஜ் சென்டர்! அக்குபஞ்சர்! நடன அரங்குகள்! பசங்களுக்கு தனி களிக்கூடங்கள்! ஐஸ் ஸ்கேட்டிங்! சைக்கிளிங் ! மூலைக்கு மூலை மது பார்கள்.! வெதுவெது நீச்சல் குளங்கள்! ஒவ்வொரு தளத்திலும் மெது மெது கார்பெட்! அங்கங்கே வித வித பொழுதுபோக்கு அம்சங்கள்!
காமெடி,,மேஜிக், இசைக்கச்சேரிகள்! பேஷன் ஷோக்கள்... கடைகள் என எங்கும் வண்ண ஜொலிப்புக்கள்!
விஸ்தீரமான பபே உணவு கூடத்தில் பாம்பு முதல் ஊர்வன -மிதப்பன- பறப்பன நடப்பன -500 வித அயிட்டங்கள்! வெளிநாட்டு உணவுடன் இந்திய வகைகளும் உண்டு.
நாங்கள் அசைவம் தொடுவதில்லை என்பதால் கொஞ்சம் தேடித்தேடி தட்டுகளை நிரப்ப வேண்டிய கட்டாயம்.
பொதுவாய் நம்மூர் ஓட்டல், கல்யாணம் காட்சி என்றால் தட்டை கணக்கு பண்ணி கட்டணம் வசூலிப்பர். அங்கு அதற்கு நேர் வினோதம்.
ஒரு முறை எடுத்த தட்டை திரும்ப உபயோகிக்க கூடாது. அடுத்தடுத்து புது தட்டுகளை தான் உபயோகிக்கணும்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட உஷாரில் உணவகத்திற்கு நுழையும் போதே ஆட்கள் நின்று மறித்து கைகழுவிக்கொண்டு பிரவேசிக்கும்படி அறிவுறுத்துகின்றனர்.
உணவகத்திலும் சரி, வெளியேவும் சரி. புன்னகையோடு உபசரிப்பு! அதற்கு அவர்கள் கொஞ்சம் கூட சளைப்பது இல்லை. சலிப்பதில்லை. அதற்காக டிப்சும் எதிர்பார்ப்பதில்லை.
(டிப்ஸ் எல்லாம் அட்வான்சாகவே புக்கிங்கின்போதே சேர்த்து லவட்டி விடுகிறார்கள்.)
அவர்களின் உடை.. அடா... அடா ! வறுமையான உடை! ஜில்..ஜில்..--
ஜொள்..ஜொள்.!
அரங்கு -- திறந்தவெளி நடனம்- நீச்சல் குளம் என எங்கும் நெஞ்சம் திறந்த உலா! மற்றவர்கள் பார்ப்பார்களே... என அவர்கள் அஞ்சுவதில்லை.. கூசுவதில்லை.
பார்க்கலாமா....கூடாதா? பார்த்தால் தப்பாய் நினைப்பார்களோ என்ற அச்சம்.. நாணம் பயிர்ப்பு எல்லாம் நமக்குத்தான் ! அது வேண்டாத கூச்சம் என்பது போகப் போகத்தான் புரிந்தது.
நம்மவர்கள் சேலை, நகை நட்டு, உடைகளை காட்டி பெருமிதம் கொள்வது போல இந்த அக்காக்கள் தங்கள் வெளுப்பை – ஜொலிப்பை பகிர்கிறார்கள்.
அடுத்த வினோதம்-- தனியாகவோ அல்லது கும்பலிலோ படம் எடுத்தால் நம்மூரில் துரத்தப்படுவோம். இங்கே அதிலும் கூட எதிர்ப்பதம்.! பெரிய மனதுடன் எடுத்துக்க என போஸ் தருகிறார்கள். கண்டுக் கொள்வதில்லை.
அதே மாதிரி நம்மை படம் எடுக்கணும் என்றாலும் மொபைலை கொடுத்தால் 'ஓக்கே' என்று சந்தோஷமாய் எடுத்துத் தருகிறார்கள்.
அமெரிக்க ஆங்கிலம் நமக்கு வசப்படாவிட்டாலும் கூட "ஹாய் ,தேங்க்யூ, ஓக்கே, ஸாரி, எக்ஸ்கியூஸ் மீ ,வெரி நைஸ் போன்ற வார்த்தைகள் தெரிந்தால் போதும் பிழைத்துக் கொள்ளலாம்..
அந்நியர்கள் என்றால் மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளுக்குள் இருந்தாலும் அவற்றை அவர்கள் வெளியே காட்டுவதில்லை.
அப்படி அவர்கள் நிற பேதம் காட்டுவது சட்டப்படி குற்றம். புகார் அளித்தால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம்.
ஆனாலும் அறிந்தவர்கள் அறியாதவர்கள் யாராக இருந்தாலும் புன்னகையோடு அவர்கள் "ஹாய்" சொல்கிறார்கள் .
அந்தக் கப்பல் அமெரிக்காவை ஒட்டின மெக்சிகோ தீவுகளில் நிற்கின்றன.
முதல் நாள் அது நின்ற தீவு "கோஸ்த மயா". "இங்கே வண்டி 4 மணி நேரம் நிற்கும். சுத்தி பார்த்துட்டு சீக்கிரம் வந்திருங்க! என்று அவர்கள் சொல்லும் பொது நம்மூர் விரைவு பேருந்துகள் ஹைவே பாடாவதி உணவகங்களில் நிறுத்தப்பட்டு "வண்டி 20 நிமிஷம் நிற்கும்" எனும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
"மாமா.. வண்டி நம்பரை குறிச்சுட்டுப் போங்க. திரும்பி வரும்போது வேறு வண்டியில ஏறிடாதிங்க..!" என்று எங்கள் மாப்ஸ் கிண்டலடித்த மாதிரியே அங்கு இன்னும் மூன்று கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மெக்சிகோ தனி நாடு என்றாலும் கூட அது பல தீவுகளைக் கொண்டது. அவர்களின் வருமானமே டூரிஸம் தான். அமெரிக்காவிலிருந்து வாரத்திற்கு 28 உல்லாச கப்பல்கள் அங்கு வருகின்றனவாம்.
அங்கேயும் பீச்! நீச்சல் குள குஷாலான குளியல்! ஆடல்- பாடல்- குடி! உணவு! நம் பாண்டி பஜார் -ரங்கநாதன் தெரு போல கடைகள் !
கப்பலின் அடுத்த ஸ்டாப் – கொஸுமேல்! அங்கும் அதே...அதே!
பஸ்ஸில் சுற்றி காட்டுகிறார்கள். பண்டைய அரசர் இந்தியப் பெண்ணை மணந்ததால் அங்கே இந்தியர்களுக்கு ஏக மரியாதை.
அப்பெண்ணிற்கு சிலையும் வடித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவிலும் சரி, மெக்சிகோவிலும் சரி, வறுமை இருந்தாலும் கூட அவர்கள் பெரும்பாலும் பிச்சை எடுப்பதில்லை.
சாலையில் உண்டியல் வைத்து இசைக்கிறார்கள். நடனம்! விதவித வேஷங்களில் நின்று அழைப்பார்கள். உண்டியல் போட்டுவிட்டு அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ளலாம்.--அதுவும் கூட அதிகமில்லை- ஒரு டாலர்!
கப்பல் பயணத்திற்கு அவர்கள் வருவது உல்லாசத்திற்கும் ஓய்வுக்கும் தான். காலை எழுந்ததுமே ஜிகு ஜிகு உடையுடன்- மதுக்கடைகளில் கியூ! அப்புறம் 24 மணி நேர பேக்கரி-பீசா!
அடுத்து நேராய் ஜிம் ! நீச்சல்! செமத்தியாய் காலை சிற்றுண்டிக்குப் பின் திரும்ப நீச்சல் குளத்தில் நீர் ஜந்து போல ஐக்யம்!
அங்கேயே உற்சாக- மற்றும் சுடு பானங்கள்! அப்புறம் மலர்ந்தும் கவிழ்ந்தும் சன் பாத்!
பிறகு பல்வேறு நாட்டின் இசைகள் முழங்க, குடும்பத்தோடும் குட்டிகளோடும் டான்ஸ்! அடுத்து வகையான லன்ச்! பிள்ளைகளுக்கு வீர விளையாட்டுகள்- சாகசங்கள்- போட்டிகள்-- அரங்குகளில் பலதரப்பட்ட ஷோக்கள்! படக் காட்சிகள்! கப்பலின் காம்பவுண்டை சுற்றி அலைகளை ரசித்தபடி வாக்!
விதவிதமான மதுக்கள்! மாதுக்கள்! 14 மாடிகளுக்கும் அநேக லிஃப்டுகள்! எது என்றாலும் சந்தேகம் போக்க தேவதைகள்!
நைட் கிளப் --இரவினில் ஆட்டம் ! ஒவ்வொரு தளத்திலும் இசைப் புயல்கள்! அத்தோடு - சூதாட்டமான காசினோக்கள்! நாள் முழுக்க- அங்கும் ஜிலு..ஜிலு! எங்கு என்ன விசேஷம் என நேர்த்தியாக வழிகாட்டுகிறார்கள்.
ஆறாம் நாள் கப்பல் மடங்கி வந்து ஹுஸ்டன் நகரில் தரை தட்டுகிறது. கப்பல் பயணம் என்றதும்- அப்படி இப்படி என யூகித்து பயமுறுத்தி - மிரட்டப்பட்டு சென்றால் - எதுவுமே இல்லை.
ஜாலியோ ஜாலி! அங்கிருந்து வெளியேறும் வரை பாதுகாப்புக்கு பஞ்சமில்லை. அவரவர்கள் விரும்பும் சொகுசுப் படி ஆன்லைனிலேயே முழு கட்டணத்தையும் கவ்வி விடுகிறார்கள்.
மது பிரியர்களுக்கும் மாமிச வெறியர்களுக்கும் அக்கட்டணம் என்பது ஜுஜுபி! அதன் காரணமாய் அவர்கள் எப்போதும் அளவில்லா மிதப்பில்!
எங்களுக்கு 'தலைக்கு' ரூபாய் 60- ஆயிரம் கட்டணம் என்றாலும்-- மது மாமிசம் பக்கம் நாங்கள் போகவில்லை என்றாலும் கூட- முதலுக்கு மோசமில்லை! அமர்க்களம்!
தொடர்புக்கு:-ncmohandoss@yahoo.com