search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- சிவராத்திரி சிந்தனைகள்
    X

    ஆன்மிக அமுதம்- சிவராத்திரி சிந்தனைகள்

    • சிவன் பார்வதிக்கு அருளிய வரத்தின்படி, இன்றளவும் சிவராத்திரி அன்பர்களால் பெரும் நம்பிக்கையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • சிவராத்திரி நோன்பின் பெருமையைச் சொல்வதோடு சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பயன்படும் வில்வ இலையின் பெருமையையும் சேர்த்தே பேசுகிறது.

    சிவராத்திரி உருவான கதையை சிவபுராணம், லிங்க புராணம், ஸ்காந்த புராணம் உள்ளிட்ட பல புராணங்கள் விரிவாகக் கூறுகின்றன.

    'தூக்கிய திருவடி துணையென நம்பினேன்' எனத் தொடங்கும் சுத்தானந்த பாரதியார் பாடல் புகழ்பெற்றது. 'ஆக்கி அளித்துலகை நீக்கி மறைத்தருளி ஐந்தொழில் புரியும் அம்பலவாணனே!' என அந்தக் கீர்த்தனையில் சிவனைப் போற்றுகிறார் கவிஞர்.

    உலகை ஆக்குதல், அதற்குத் தேவையானவற்றை அளித்துக் காத்தல், உலகை நீக்குதல், அதை மறைத்தல், பின் அருளல் என ஐந்து தொழில்களைப் புரிபவன் சிவபெருமான்.

    அப்படிச் சிவன் ஆக்கி அளித்து நீக்கி மறைத்தபோது பார்வதிதேவி பதறினாள். சிவன் மறுபடி உலகை அருள வேண்டுமே, உலகில் மீண்டும் உயிர்கள் பிறந்து உய்ய வேண்டுமே எனக் கருணை கொண்டது சகல உயிர்களுக்கும் தாயான அவளின் அன்பு மனம்.

    அன்னை பார்வதி ஓரிரவு முழுவதும் சிவத் தியானத்தில் ஆழ்ந்தாள். சிவபெருமானிடம் உலகை மீண்டும் தோற்றுவித்து அருளுமாறு வேண்டினாள். சிவன் உமாதேவியின் வேண்டுகோளை ஏற்று உலகை மறுபடிப் படைத்தருளினார்.

    பார்வதி, தான் சிவபெருமானை தியானம் செய்த ராத்திரி சிவராத்திரியாக அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் அன்று கண்விழித்து சிவத் தியானம் செய்பவர்கள் இம்மையில் எல்லா நலன்களும் பெற்று மறுமையில் முக்தி அடைய வேண்டும் என்றும் வரம் கேட்டாள்.

    சிவன் பார்வதிக்கு அருளிய வரத்தின்படி, இன்றளவும் சிவராத்திரி அன்பர்களால் பெரும் நம்பிக்கையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    சிவராத்திரி தொடர்பாக இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அது சிவராத்திரி நோன்பின் பெருமையைச் சொல்வதோடு சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பயன்படும் வில்வ இலையின் பெருமையையும் சேர்த்தே பேசுகிறது.

    ஒரு வேடன் வனத்தில் வேட்டையாடச் சென்றான். நேரம் இரவாகிவிட்டது. வேட்டையாட வந்தவனை வேட்டையாட எண்ணியது ஒரு புலி. கடும் பசியோடிருந்த புலி வேடனைத் துரத்தத் தொடங்கியது.

    வேடன், புலியிடம் இருந்து தப்பிக்க ஒரு மரத்தின் மேல் ஏறிக் கிளையில் நடுக்கத்தோடு அமர்ந்தான். அது வில்வ மரம் என்பதையோ அந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது என்பதையோ அவன் அறியவில்லை.

    உறக்கம் வந்து மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டால் அவனைப் புலி அடித்துச் சாப்பிட்டுவிடும். எனவே உறக்கம் வராதிருக்க ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். என்ன செய்வது?

    அவன் தன்னிச்சையாக வில்வ இலைகளைக் கிள்ளிக் கிள்ளி மரத்தின் மேலிருந்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.

    என்ன ஆச்சரியம்! அவன் கிள்ளிப் போட்ட வில்வ இலைகளெல்லாம் சரியாக மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் தலையில் விழுந்தன. தெரிந்தோ தெரியாமலோ உறங்காமல் ஓரிரவு முழுவதும் தன்னை அர்ச்சனை செய்தவனை சிவபெருமான் கைவிடுவாரா?

    லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டுத் தோன்றினார் அவர். தன் கையிலிருந்த சூலாயுதத்தால் புலியைக் கொன்று வேடனைக் காப்பாற்றினார். வியப்படைந்த வேடன் சிவபெருமானின் அருளைப் போற்றி அவரை வணங்கி மகிழ்ந்தான்.

    அந்த வேடன் வில்வ இலைகளால் சிவனை அர்ச்சித்த ராத்திரியே சிவராத்திரி என்கிறது சிவராத்திரியின் தோற்றம் பற்றிய இந்தக் கதை.

    நம் மனமே காடு. அதில் தோன்றும் தீய உணர்வுகளே பசித்திருக்கும் புலிகள். சிவனை அர்ச்சித்தால் சிவன் நம் மனத்தில் உள்ள தீய உணர்வுகளாகிய புலிகளை அழித்து நம் மனத்தைத் தூய்மையானதாக மாற்றுவான் என்பது இக்கதையின் உட்பொருள்.

    *சிவராத்திரியின் முக்கியத்துவம் என்ன, அன்று சிவனை வழிபடும் நியமங்கள் எவை, சிவராத்திரியன்று நோன்பிருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, அப்படி நோன்பிருந்து பேறு பெற்றவர்கள் யார் யார் என்பன போன்ற விவரங்களையெல்லாம் உள்ளடக்கிய செய்யுள் நூல் ஒன்று தமிழில் உண்டு.

    'மகாசிவராத்திரி கற்பம்' என்பது அந்நூலின் பெயர். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல் அது. முப்பத்தொன்பது குறட்பாக்களைக் கொண்ட சிறிய நூல்.

    *முக்கண்ணனாகிய சிவபெருமானை எந்த மலர் கொண்டும் அர்ச்சிக்கலாம். என்றாலும் மூன்று இலைகளைக் கூட்டாகக் கொண்டு திகழும் வில்வத்தால் அர்ச்சனை செய்வது விசேஷம்.

    மற்ற மலர்களுக்கும் இந்த வில்வ இலைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. வில்வத்தை மட்டும் ஒருமுறை அர்ச்சித்து விட்டு, மறுநாள் எடுத்து நீரால் தூய்மை செய்து மறுபடி அர்ச்சிக்கலாம். வில்வம் ஒருபோதும் பழையதாவதில்லை. அது என்றும் புதுமையானது.

    வெள்ளை வெளேர் என்றிருக்கும் சின்னஞ்சிறிய தும்பை மலர் புல்வெளிகளில் பூத்துக் கிடக்கும். அந்தத் தும்பை மலர் சிவனுக்குப் பிடித்தமானது. தும்பை மலராலும் சிவனை அலங்கரிக்கலாம். அர்ச்சிக்கலாம்.

    ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு பிப்ரவரி பதினெட்டாம் தேதி இரவு சிவராத்திரி.

    எனவே அன்று காலையில் இருந்து உறங்காமல் விழித்திருந்து சிவத்தியானத்தில் ஈடுபடுவது பெரும் புண்ணியம் தரும். பிப்ரவரி 19 காலை ஆறுமணி வரை கண்விழித்திருத்தல் சிறப்பு.

    மகாசிவராத்திரி நன்னாளில் அனைத்து சிவாலயங்களும் விடிய விடியத் திறந்திருக்கும். அன்பர்கள் இரவு எந்நேரத்தில் வேண்டுமானாலும் போய் இறைதரிசனம் செய்யலாம்.

    ஆலயங்களில் பிப்ரவரி 18 மாலை ஆறுமணி முதல் சிவபூஜை ஆரம்பித்து விடும். அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் மனமொன்றி ஈடுபட்டு சிவனை தியானிப்பது மிகவும் நல்லது. சிவ சிந்தனைகளில் மனம் தோய்வதற்கு ஆலய வழிபாடு பெரிதும் உதவும்.

    ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் சிவராத்திரி அன்று கூடுவதால், கூட்டுப் பிரார்த்தனையின் சக்தியையும் நாம் உணரலாம்.

    'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!'

    என்பது திருமூலர் திருமந்திரம். உடலையே ஆலயமாகக் கருதி, ஜீவனையே சிவலிங்கமாகக் கருதி மனத்தில் சிவனை இருத்தி வழிபடுதல் இன்னும் நல்லது.

    சென்னை திருநின்றவூரில் வசித்த பூசலார் நாயனார் மனக்கோயில் கட்டி அதில் சிவனை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தார்.

    பெரியபுராணம் என்னும் உயரிய கவிதை நூல் மூலம் சிவனுக்குச் சொற்கோயில் கட்டிய சேக்கிழார், பூசலார் நாயனாரின் மனக்கோயிலின் பெருமை குறித்தும் அதில் விரிவாகக் குறிப்பிடுகிறார்.

    பூசலார் நாயனாரின் மனக்கோயில் குடமுழுக்கிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், பல்லவ மன்னன் காடவர்கோன் கட்டிய கற்கோயிலின் குடமுழுக்கு தினத்தைச் சற்றுத் தள்ளி வைக்கச் சொல்லிக் கனவில் வந்து கட்டளை இட்டார் சிவபெருமான் என்ற செய்தி பெரியபுராணத்தில் இடபெற்றுள்ளது.

    ஆலயங்கள் அனைத்தும் உயர்ந்தவையே. அதில் சந்தேகமில்லை. எனினும் புற ஆலயங்களை விட உயர்ந்தது அக ஆலயமான உள்ளக் கோயிலே. ஆலயங்களுக்குச் சென்றாலும் அங்கு ஆராதிக்கப்படும் இறைவனை நம் உள்ளக் கோயிலில் எழுந்தருளச் செய்து வழிபட முயல்வது நல்லது.

    * சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் திருமாலை அலங்காரப் பிரியன் என்றும் சொல்வதுண்டு. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் செய்ய நம் நோய்கள் நீங்கும். மனம் தெளிவு பெறும். எல்லா நன்மைகளும் ஏற்படும்.

    சிவலிங்கத்தை நல்லெண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பசும்பால், தயிர், நெய், தேன், இளநீர், கரும்புச் சாறு, சந்தன நீர், கலச தீர்த்தம் எனப் பலவற்றால் அபிஷேகம் செய்வார்கள். சிவன் தலையில் நிரந்தரமாக உள்ள கங்கை அவரை எப்போதும் அபிஷேகம் செய்துகொண்டே இருக்கிறது.

    வட இந்திய ஆலயங்களில் சிவ லிங்கத்திற்கு அவரவரே அருகில் சென்று லிங்கத்தைத் தொட்டு அபிஷேகம் செய்யும் மரபு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் அர்ச்சகர்களே அபிஷேகம் நிகழ்த்துகிறார்கள்.

    * சிவநாமத்தைச் சொல்வதனால் கிட்டும் புண்ணியம் அளவிட இயலாதது. கடுமையாய் நோய்வாய்ப்பட்ட நோயாளியிடம் அரிசியையும் வசம்பையும் சேர்த்துச் சாப்பிடுமாறும் அதுவே நோய்க்கான மருந்து என்றும் மருத்துவர் சொன்னாராம்.

    நோயாளி அந்த மருந்தை மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 'அரிசி வசம்பு' என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தானாம். அது 'அரி, சிவ, சம்பு' என்றும் பொருள்படுவதால் அவன் இறை நாமத்தைச் சொன்னதாகக் கருதி அவனுக்கு முக்தி அருளப்பட்டதாம்.

    இந்தக் கதையை வாரியார் சுவாமிகள் தம் சொற்பொழிவின் இடையே சொல்வதுண்டு. தெரிந்து சொன்னாலும் தெரியாமல் சொன்னாலும் சிவநாமம் புண்ணியம் தர வல்லது.

    இறைநாமத்தைச் சொன்னால் புண்ணியம் என்பதால் தான் முந்தைய தலைமுறையினர் குழந்தைகளுக்கு இறைவன் திருப்பெயர்களைச் சூட்டினார்கள். ஒவ்வொருமுறை அந்தப் பெயரைச் சொல்லிக் குழந்தைகளை அழைக்கும்போதும் தங்களுக்குப் புண்ணியம் சேரும் என்று நம்பினார்கள்.

    குழந்தைகளை அழைக்கும் போதெல்லாம் குழந்தைகளின் நாமத்துக்குரிய இறைவனையும் அடிக்கடி நினைத்துக் கொண்டார்கள்.

    இறை நாமத்தை மீண்டும் மீண்டும் சொல்வது நம் பாவங்களைக் கரைக்கக் கூடியது என்பது நம் பொதுவான ஆன்மிக நம்பிக்கை.

    சிவராத்திரி அன்று 'சிவாயநம' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை நூற்றியெட்டு முறையேனும் ஜபிப்பது பெரும் புண்ணியத்தை அருளக் கூடியது. மற்ற சாதாரண தினங்களை விட சிவராத்திரி இரவு காற்றில் தெய்வீகத்தின் அதிர்வலைகள் மிகவும் கூடுதலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மற்ற நாட்களை விட, அன்று சிவ நாமத்தை ஜபிப்பது, விரைவாக சிவபெருமானின் அருளைப் பெற வழி வகுக்கும்.

    சிவராத்திரியன்று மனமொன்றி சிவபெருமானை வழிபடுவோம். சிவனருளால் எல்லா நலங்களும் பெறுவோம்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×