search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இன்று உலக கிட்னி விழிப்புணர்வு தினம்: 90 சதவீதம் கிட்னி பழுதாகும் வரை அறிகுறி இல்லாமல் இருக்கலாம்- மருத்துவர் எச்சரிக்கை
    X

    இன்று உலக கிட்னி விழிப்புணர்வு தினம்: 90 சதவீதம் கிட்னி பழுதாகும் வரை அறிகுறி இல்லாமல் இருக்கலாம்- மருத்துவர் எச்சரிக்கை

    • சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.
    • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.

    உலக கிட்னி விழிப்புணர்வு தினம் இன்று. சர்க்கரை வியாதி, இதய நோய் போல் கிட்னி பாதிப்பும் பெருமளவில் இருக்கிறது.

    இதில் இருந்து ஒவ்வொருவரும் தன்னை தற்காத்து கொள்ள என் னென்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பிரபல கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்திரராஜன் விளக்கினார்.

    அவர் கூறியதாவது:-

    அறிகுறி தெரியாது:

    எனக்கு கிட்னி பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. சிறுநீர் கழிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீர் நிறையவும் செல்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு தவறு.

    சிறுநீரக பாதிப்பு என்பது வெளியே எளிதாக தெரிவதில்லை. 90 சதவீதம் சிறுநீரகம் செயலிழக்கும் வரை எந்தவிதமான அறிகுறிகளும் வெளியே தெரியாமல் கூட இருக்கும்.

    அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதும் சிறுநீரக பாதிப்பின் காரணமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இதயம் ஒன்றே ஒன்று தான். அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பெரும் பாலும் அறிகுறி தென்பட்டு விடும். அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று ஏதாவது பிரச்சினை இருக்கும்.

    ஆனால், கிட்னி இரண்டு இருப்பதால் 90 சதவீதம் பாதிக்கும் வரை அது தனது வேலையை செய்து கொண்டே இருக்கும். நமக்கு வெளியே தெரியாது. கிட்னி செயலிழப்பு என்பது 'சைலன்ட் கில்லர்' போன்றது.

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 10 பேரில் 6 பேருக்கு சிறுநீரக பாதிப்பு வருகிறது. எனவே கவனம் தேவை.

    சிறுநீரக பாதிப்பு:

    தமிழ்நாட்டை பொறுத்தவரை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு தான் கிட்னி பாதிப்பு, டயாலிசிஸ் என்பது பிரபலமானது.

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார்.

    அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த தஞ்சை மருத்துவ குழுவில் நானும் இருந்தேன். சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக முடிவு செய்து குளுகோஸ் ஏற்றப்பட்டதும் அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார்.

    ஆனால், அவரது ரத்த மாதிரியை நான் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு அறிகுறி இருப்பதாக மருத்துவ வல்லுனர் டீன் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அடுத்த சில நாளில்

    எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது சிறுநீரகம் செயலிழந்து இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி சென்னை திரும்பினார்.

    டயாலிசிஸ்

    அந்த கால கட்டத்தில் டயாலிசிஸ்சும் பிரபலமாக வில்லை. எனது மனைவி தமிழிசை இரண்டு டயா லிசிஸ் கருவியை வைத்து 200 ரூபாய் கட்டணத்தில் வீட்டில் வைத்தே சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலி சிஸ் செய்து வந்தார்.

    அப்போது மத்திய மந்திரியாக இருந்த ஹர்ஷவர்தன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார். அந்த நேரத்தில் டயாலிசிஸ் அவசிய தேவை பற்றி அவரிடம் பேசி கொண்டு இருந்தோம். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து டயாலிசிஸ் திட்டம் தொடர்பாக புள்ளி விபரங்களை மத்திய அரசு கேட்டு பெற்றது.

    தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது சிறுநீரக பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.

    டாலிசிஸ் சென்டர்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அடுத்த இரண்டே மாதத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலும், பெரம்பூர் ரெயில் நிலையம் அருகிலும் டயாலிசிஸ் மையங்களை திறந்தார்.

    அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து கவுரவப்படுத்தினார். இந்தியாவிலேயே முதல் முதலாக மாநகராட்சி சார்பில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது சென்னையில்தான்.

    அந்த பெருமை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சேரும். இப்போது எல்லா மாவட்டங்களிலும் டயாலிசிஸ் வசதி கிடைக்கிறது.

    இதயமும், சிறுநீரகமும் மாமன் மைத்துனன் மாதிரி. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன் என்று ஒன்றை தொடர்ந்து இன்னொன்றும் பாதிக்கும்.

    கிட்னியின் நிலையை அறிந்து கொள்ள 'ஆல்புமின், கிரியேட்டின் அளவு, அடிவயிற்றுக்கு ஒரு ஸ்கேன் ஆகிய 3 பரி சோதனை மேற்கொண்டால் போதும்.

    பொதுவாக 32 வயதை கடந்தவர்கள் ஆண்டு தோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    குடும்பத்தில் யாராவது கிட்னி பாதிப்புக்கு ஆளாகி இருந்தால் மற்றவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம். பெற்றோரிடம் இருந்து சொத்து மட்டுமல்ல.

    இந்த மாதிரி வியாதிகளும் கிடைக்கலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நம் உடலில் இருந்து நச்சுப் பொருள்களை வெளியேற்றுவது முதல் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது வரை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காப்பதில் சிறுநீரகங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

    ஆனால், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு நம் சிறுநீரகங்களை நாம் கவனித்துக் கொள்கிறோமா?

    சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகப்படியான மருந்துகள், வலி நிவாரணி களைத் தவிர்ப்பது சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கும். முக்கியமாக சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    உடலை நீர் ஏற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும். ரத்த அழுத்தத்தை அன்றாடம் சரிபார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, உடல் பரிசோதனைகளைத் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×