search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஓவருக்கு பிறகு சரியாக பேட்டிங் ஆடவில்லை: தோல்விக்கு பொறுப்பேற்ற டோனி
    X

    10 ஓவருக்கு பிறகு சரியாக பேட்டிங் ஆடவில்லை: தோல்விக்கு பொறுப்பேற்ற டோனி

    10 ஓவருக்கு பிறகு சரியாக பேட்டிங் செய்யாததால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தோம் என புனே கேப்டன் டோனி கூறியுள்ளார்.
    புனே:

    ஐ.பி.எல். போட்டியில் புனே அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்தது.

    புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. சவுரவ் திவாரி 45 பந்தில் 57 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சுமித் 23 பந்தில் 45 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பும்ரா 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், மெக்லகன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டனும், தொடக்க வீரருமான ரோகித்சர்மா 60 பந்தில் 85 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), பட்லர் 17 பந்தில் 27 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் பெற்ற 5–வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 2–வது இடத்துக்கு முன்னேறியது. ஏற்கனவே புனேயிடம் தோற்றதற்கு பழிதீர்த்துக்கொண்டது.

    புனே அணி 6–வது தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு டோனியின் மோசமான ஆட்டமும் ஒரு காரணமாகும். புனே அணி முதல் 10 ஒவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன் குவித்தது. இதனால் ஸ்கோர் 180 ரன் வரை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கடைசி 10 ஓவர்களில் புனே அணி ஆட்டம் சொதப்பலாக இருந்தது. டோனி 24 பந்தில் 24 ரன்களே எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரி அடங்கும்.

    இந்த தோல்விக்கு கேப்டன் டோனியே பொறுப்பேற்று உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

    10 ஓவருக்கு பிறகு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எனது பாதுகாப்பான ஆட்டம் அணிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்.

    பந்துவீச்சில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாட கடுமையாக போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:–

    பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். 159 ரன்னுக்குள் புனே அணியை கட்டுப்படுத்தியது பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது. கேட்ச்களை தவறவிட்டனர். சுழற்பந்து வீரர்களும், வேகப்பந்து வீரர்களும் அபாரமாக செயல்பட்டனர்.

    எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியமான வெற்றி. ஆடுகளத்தில் ஹர்பஜன் சிங்கும், அம்பதி ராயுடுவும், மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இனிவரும் ஆட்டங்களில் இது மாதிரி செயல்படமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×