search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் மாநில ஆக்கி போட்டி: நெல்லை அணி முதல் பரிசை வென்றது
    X

    கோவில்பட்டியில் மாநில ஆக்கி போட்டி: நெல்லை அணி முதல் பரிசை வென்றது

    கோவில்பட்டியில் நடந்த மாநில ஆக்கி இறுதி போட்டியில், நெல்லை அணி முதல் பரிசை வென்றது.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி ஆக்கி மைதானத்தில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கழகம் சார்பில் 27-வது மாநில ஆக்கி போட்டி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. நேற்று மாலையில் இறுதி போட்டிகள் நடைபெற்றன.

    நெல்லை நிஷாத் ஆக்கி அணியும், கோவில்பட்டி தாமஸ்நகர் ஆக்கி அணியும் விளையாடின. ஆட்ட நேரத்தில் 2 அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனால் டைபிரேக்கர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் நெல்லை அணி 3 கோல்களும், தாமஸ்நகர் அணி ஒரு கோலும் அடித்தது. இதனால் நெல்லை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக 3, 4-வது இடத்திற்கான போட்டியில் மதுரை திருநகர் ஆக்கி அணியும், வாடிப்பட்டி ஆக்கி அணியும் விளையாடின. இதில் திருநகர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, என்ஜினீயர் செந்தில் தலைமை தாங்கினார். முன்னாள் ஆக்கி வீரர்கள் செல்வசேகர், கொம்பையா, பூலோக பாண்டியன், மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், அம்பேத்கர் மக்கள் இயக்கம் தாவீது ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் தாயப்ப கார்த்திகேயன் வரவேற்றார்.

    முதல் பரிசை வென்ற நெல்லை நிஷாத் அணிக்கு வேலய்யா-தாயம்மாள் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசை, டாக்டர் தாயப்ப கார்த்திகேயன், செந்தில் ஆகியோர் வழங்கினர். கோவில்பட்டி தாமஸ்நகர் அணிக்கு 2-வது பரிசாக பெரிய மாரியப்பன் நினைவு சுழற்கோப்பையும், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பரிசையும், சுங்க இலாகா சூப்பிரண்டு கண்ணன் வழங்கினார்.

    மதுரை திருநகர் அணிக்கு 3-வது பரிசாக பால்ராஜ் நினைவு சுழற்கோப்பையும், ரூ.5 ஆயிரத்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை, சுப்பையா ஆகியோர் வழங்கினர். 4-வது இடம் பிடித்த வாடிப்பட்டி அணிக்கு ஆறுமுகம் நினைவு சுழற்கோப்பையும், ரூ.4 ஆயிரம் பரிசையும், தொழில் அதிபர்கள் முகேஷ், மனோஜ் ஆகியோர் வழங்கினர்.

    முடிவில், பேராசிரியை ஜெயந்தி கார்த்திகேயன் நன்றி கூறினார்.
    Next Story
    ×