என் மலர்
செய்திகள்
X
குத்துச்சண்டை உலகின் எவர்கிரீன் நாயகன் முஹம்மது அலியின் வாழ்க்கை சுருக்கம்
Byமாலை மலர்6 Jun 2016 2:50 PM IST (Updated: 6 Jun 2016 2:50 PM IST)
மூன்று முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்ற முஹம்மது அலியின் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களை திரும்பிப் பார்ப்போம்.
சென்னை:
குத்துச்சண்டை உலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர், அமெரிக்காவின் முஹம்மது அலி. ஆக்ரோஷமான குத்துகளால் எதிராளியை திக்குமுக்காட வைப்பதுடன், ‘நாக்-அவுட்’ செய்வதிலும் கில்லாடி ஆவார். மின்னல் வேகத்திலான அவரது குத்துகளை கணித்து செயல்படுவது கடினம். இடது கையால் முஹம்மது அலி விடும் தாக்குதல்கள் நம்ப முடியாத கோணத்தில் இருக்கும். களத்தில் அவர் பெரும்பாலும் முகத்தை கையால் மறைப்பதில்லை. கைகளை சற்று தாழ்வாக வைத்து, எதிராளி தாக்கும் போது புலி போல் பாய்ந்து புரட்டியெடுத்து விடுவார். இத்தகைய பாணியை அறிமுகப்படுத்தியவர் முஹம்மது அலி தான்.
இயற்கையாகவே குத்துச்சண்டை திறமையை பெற்று இருந்த முஹம்மது அலி தனது 12 வயதில் பயிற்சியை தொடங்கினார். 1960-ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் லைட் ஹெவிவெயிட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த முஹம்மது அலி அதே ஆண்டில் தனது 18-வது வயதில் தொழில் முறை குத்துச்சண்டை வீரராக அவதாரம் எடுத்தார்.
அமெச்சூர் பந்தயத்தில் காட்டிய ஆதிக்கத்தை தொழில்முறை போட்டியிலும் முஹம்மது அலி தொடர்ந்தார். வெற்றிமேல் வெற்றிகளை குவித்து பிரமிக்க வைத்தார். முதல் 31 பந்தயத்தில் அவர் தோல்வி பக்கமே சென்றதில்லை. 1964-ம் ஆண்டு உலக ஹெவிவெயிட் பந்தயத்தில், அச்சமயம் ஆபத்தான வீரராக வர்ணிக்கப்பட்ட சோனி லிஸ்டனை துவம்சம் செய்து சாம்பியன் கிரீடத்தை வசப்படுத்திய முஹம்மது அலி 1974 மற்றும் 1978-ம் ஆண்டுகளிலும் உலக ஹெவிவெயிட் பட்டத்தை வென்றார். 3 முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இதற்கிடையே, 1967-ம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில் அமெரிக்க ராணுவத்தில் இணைந்து செயல்பட முஹம்மது அலி மறுத்தார். அது தனது மதக்கோட்பாட்டுக்கு எதிரானது என்று கூறினார். இதனால் பல இன்னல்களுக்கு ஆளானார். ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. தடையால் மூன்றரை ஆண்டு காலம் உயிருக்கு உயிராக நேசித்த குத்துச்சண்டையை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டி இருந்தது. ஆனாலும் அவர் ஓய்ந்து விடவில்லை. சட்டரீதியாக போராடி தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்று மறுபிரவேசம் செய்த முஹம்மது அலி, மீண்டும் வியப்புக்குரிய திறனை வெளிப்படுத்தி குத்துச்சண்டை விளையாட்டு அரங்கில் முடிசூடா சக்கரவர்த்தியாக கோலோச்சினார்.
தொழில்முறை குத்துச்சண்டையில் 61 போட்டிகளில் விளையாடி அதில் 37 நாக்-அவுட் உள்பட 56 ஆட்டங்களில் வெற்றி கண்டு இருந்தார். 1981-ம் ஆண்டில் தனது 39-வது வயதில் ஜமைக்கா வீரர் டிரிவோர் பெர்பிக்கிடம் சந்தித்த தோல்வியுடன் முஹம்மது அலி குத்துச்சண்டைக்கு ஓய்வு கொடுத்தார்.
‘நூற்றாண்டின் சிறந்த வீரர்’ என்ற விருதால் கவுரவிக்கப்பட்ட முஹம்மது அலி கருப்பர் இன உரிமைக்காக குரல் கொடுக்க தவறியது கிடையாது. கருப்பர் இன போராட்டத்துக்கு ஆதரவாக தான் வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியதாக தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ‘பட்டாம் பூச்சி போல் மிதந்திடுங்கள், தேனீயை போல் கொட்டிவிடுங்கள்’ என்ற முஹம்மது அலியின் வாசகம் மிகவும் பிரபலமானது.
குத்துச்சண்டையில் இருந்து விடைபெற்ற முஹம்மது அலிக்கு, பந்தயங்களின் போது தலையில் வாங்கிய குத்துகளால் பார்கின்சன் என்னும் வியாதி தாக்கி இருப்பது 1984-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மனித உறுப்புகளின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒரு வகையான வாத நோயாகும். 2014-ம் ஆண்டில் அவருக்கு நுரையீரல் பிரச்சினையும், கடந்த ஆண்டில் சிறுநீரக பாதை தொற்று உள்ளிட்ட நோயும் தாக்கியது. இதற்காக அவர் அடிக்கடி சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு இடையே சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முஹம்மது அலிக்கு மீண்டும் சுவாச கோளாறு பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பீனிக்ஸ் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 32 ஆண்டு காலம் பார்கின்சன் நோயுடன் போராடி வந்த முஹம்மது அலி சிகிச்சை பலனின்றி தனது 74-வது வயதில் மரணம் அடைந்தார்.
இவரது உண்மையான பெயர் கேசியஸ் மார்செல் கிளே. 1964-ம் ஆண்டில் மதம் மாறிய பிறகு முஹம்மது அலி என்று பெயரை மாற்றிக் கொண்டார். முஹம்மது அலிக்கு, 4 மனைவிகளும், 7 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் லைலா அலி தந்தையை போல் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் ஆவார்.
முஹம்மது அலியின் மரணம் உலகம் முழுவதும் உள்ள குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி, இந்தி நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு உலகினர் பலரும் முஹம்மது அலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், ‘விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் வீரர்களுக்கு முஹம்மது அலி முன்னுதாரணமாக விளங்கினார்’ என்று தெரிவித்துள்ளார்.
முஹம்மது அலியின் மகள்களில் ஒருவரான ஹனா அலி டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள உருக்கமான தகவலில், ‘முஹம்மது அலியின் கடைசி தருணத்தில் நாங்கள் அனைவரும் அருகில் இருந்தோம். அவரை கட்டியணைத்த படியும், முத்தமிட்டபடியும், கைகளை பற்றிக் கொண்டும் இருந்தோம். பிரார்த்தனையும் செய்தோம். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த பின்னரும் கூட இதயம் மட்டும் துடிப்பை நிறுத்தவில்லை. சுமார் 30 நிமிடங்கள் இதயம் துடித்துக் கொண்டு இருந்தது. இது அவரது உடல் வலிமையை காட்டுவதாக இருந்தது. அவரை போன்ற ஒரு மாமனிதரை ஒரு போதும் பார்க்க முடியாது’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Next Story
×
X