search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முச்சதம் அடித்து அசத்தல்
    X

    ரஞ்சி டிராபி: டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முச்சதம் அடித்து அசத்தல்

    ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்கெதிராக டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முச்சதம் அடித்து அசத்தினார்.
    இந்தியாவின் முதல் தர டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள மகாராஷ்டிரா - டெல்லி அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன.

    கடந்த 13-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ஸ்வப்னில் குகாலே 351 ரன்களும் (521 பந்து, 37 பவுண்டரி, 5 சிக்சர்), அங்கித் பாவ்னே 258 ரன்களும் (500 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) குவிக்க மகாராஷ்டிரா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 594 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.

    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், ஒரு ஜோடியின் அதிகபட்ச ரன்கள் இதுதான். இதற்கு முன்பு 1947-ம் ஆண்டு ஹோல்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா வீரர்கள் விஜய் ஹசாரே-குல் முகமது 4-வது விக்கெட்டுக்கு 577 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 69 ஆண்டு கால சாதனையை குகாலே-பாவ்னே இணை முறியடித்து அசத்தியுள்ளது.

    பின்னர் டெல்லி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும் 19 வயதே ஆன விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலையாக நின்று ஆடினார்.

    அவர் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார். இதனால் டெல்லியின் ஸ்கோர் மகாராஷ்டிராவின் ஸ்கோரை நெருங்கி வந்தது. ஸ்வப்னில் குகாலேவிற்கு தான் சற்றும் சலைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பந்த் முச்சதம் அடித்தார். இறுதியாக டெல்லியின் ஸ்கோர் 577 ரன்னாக இருக்கும்போது 326 பந்தில் 42 பவுண்டரிகள், 9 சிக்சருடன் 308 ரன்கள் குவித்து பந்த் அவுட் ஆனார்.

    மகாராஷ்டிர கேப்டன் அடித்த முச்சதத்திற்கு பதிலடியாக பந்த் முச்சதம் அடித்ததால் டெல்லி அணி முதல் இன்னிங்சில் 590 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இது மகராஷ்டிரா அணியை விட 45 ரன்கள் குறைவாகும். இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இன்னும் 30 ஓவர்களே உள்ளன. முதல் இன்னிங்சில் மகாராஷ்டிரா முன்னிலை பெற்றதால் டெல்லி அணி புள்ளி வாய்ப்பை இழக்கிறது.
    Next Story
    ×