என் மலர்
செய்திகள்
X
ஐபிஎல் கிரிக்கெட் - பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை
Byமாலை மலர்22 May 2018 10:54 PM IST (Updated: 22 May 2018 10:54 PM IST)
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை. #IPL2018 #CSKvSRH
ஐபிஎல் 2018 தொடரின் ‘குவாலிபையர் 1’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணியில் ஷிகர் தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் பிராவோ 2 விக்கெட், சாஹர், நிகிடி, ஷர்துல் தாகுர், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, சென்னை அணி 140 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் இறங்கினர். வாட்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
முதலில் இருந்தே ஐதராபாத் அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சென்னை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. டு பிளசிஸ் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று அரை சதமடித்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. டு பிளசிஸ் 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் சார்பில் சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #CSKvSRH
Next Story
×
X