என் மலர்
விளையாட்டு

வேட்டை சட்டையில் புதிய கெட்டப்- அமைச்சர் உதயநிதியுடன் மாஸ் காட்டிய ஹாக்கி அணி கேப்டன்கள்

- ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன.
- இன்று இரவு 8.30 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.
நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான ரேசில் உள்ளன.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஓய்வு நாளான நேற்று அத்தனை கேப்டன்களும் போட்டோஷூட் நடத்தப்பட்டது. ஹாக்கி அணி கேப்டன்கள் 6 பேர் வேஷ்டி சட்டையுடன் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் கீழ் தளத்தில் உள்ள விஐபி அறையில் காத்திருந்தனர். விளையாட்டுத்துறையின் செயாலளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, மேகநாத் ரெட்டி மற்றும் ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட வேஷ்டி சட்டையிலேயே வந்திருந்தனர்.
"ஹாக்கி வீரர்களுடன், வேட்டி, சட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!"#UdhayanidhiStalin | #Hockey | #Chennai | #KalaignarSeithigal | @Udhaystalin pic.twitter.com/NvxTSiRHhu
— Kalaignar Seithigal (@Kalaignarnews) August 8, 2023
இரவு 7:30 மணிக்கு மேலாக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் வேஷ்டி சட்டையோடு மைதானத்திற்கு வந்து அத்தனை கேப்டன்களுக்கும் கை குலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதெல்லாம் முடிந்த பிறகு போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அத்தனை பேரும் சென்று வெற்றிக்கோப்பையுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், கேப்டன்களுடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்திவிட்டு உதயநிதி விடைபெற்றார்.
தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.