என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜோ ரூட் போராட்டம் வீண்: சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் இப்ராகிம் ஜத்ரன் 177 ரன்கள் விளாசினார்.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் பி பிரிவில் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது.
37 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.
அஸ்மதுல்லா 41 ரன்னும், ஹஷ்மதுல்லா ஷஹிடி, முகமது நபி தலா 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் ஜோ ரூட் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட்டானார். 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்-ஜாஸ் பட்லர் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். பென் டக்கெட், ஜாஸ் பட்லர் தலா 38 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஓவர்டன் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இங்கிலாந்து 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், இங்கிலாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.
ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா ஒமர்சாய் 5 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.