search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விராட் கோலியின் 300-வது ஒருநாள் போட்டியை காண துபாய் சென்ற அனுஷ்கா சர்மா
    X

    விராட் கோலியின் 300-வது ஒருநாள் போட்டியை காண துபாய் சென்ற அனுஷ்கா சர்மா

    • தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டி துபாயில் இன்று நடக்கிறது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன. பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் வெளியேறின.

    2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இந்த போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக ஹாட் ரிக் வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டி விராட் கோலியின் 300-வது ஒரு நாள் போட்டி ஆகும். 300-வது போட்டியில் விளையாடும் 7-வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுகிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் (463 போட்டி), டோனி (347), ராகுல் டிராவிட் (340), அசாருதீன் (334) கங்குலி (308), யுவராஜ்சிங் (301) ஆகியோருடன் விராட் கோலி இணைகிறார்.

    36 வயதான விராட் கோலி 299 போட்டியில் 287 இன்னிங்சில் 14,085 ரன் எடுத்துள்ளார். இவரது சராசரி 58.20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 93.41 ஆகும். இதில் 51 சதமும், 73 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்களை குவித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியில் அவர் தனது 51-வது சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் கோலி 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்தார். கோலி தனது 300-வது போட்டியில் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    விராட் கோலியின் 300-வது போட்டியை பார்ப்பதற்காக அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா துபாய் சென்றுள்ளார். ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்களுக்கு குடும்பத்தினரை அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×