என் மலர்
கிரிக்கெட் (Cricket)
5வது டெஸ்ட்: ஏழு பேர் அவுட்.. முதல் நாளே தடுமாறும் இந்திய அணி
- ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துகிறார்.
- இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்தப் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துகிறார்.
பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுப்மன் கில் சற்று நேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரும் 64 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை அடித்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை சேர்த்து இருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கிய ஆட்டத்தில் விராட் கோலியுடன் இணைந்த ரிஷப் பண்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 69 பந்துகளில் 17 ரன்களுக்கு நடையை கட்டினார்.
எனினும், நிலைத்து ஆடிய ரிஷப் பண்ட் 98 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்களை சேர்த்தார். இவருடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா பொறுமையாக ஆடி வருகிறார். கிட்டத்தட்ட 14 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த ஜடேஜா 26 ரன்களை சேர்த்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணி வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வரும் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் நேதன் லயன் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.