என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஹசன் நவாஸ் அதிரடி சதம்: நியூசிலாந்துக்கு எதிராக 205 இலக்கை 16 ஓவரில் எட்டி பாகிஸ்தான் அபார வெற்றி
- பாகிஸ்தான் தொடக்க ஜோடி 5.5 ஓவரில் 74 ரன்கள் விளாசியது.
- ஹசன் நவாஸ் 45 பந்தில் 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்க் சாப்மேன் 44 பந்தில் 94 ரன்கள் விளாச நியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ரன்கள் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் சேஸிங்கை தொடங்கியது. முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்தை சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.
பாகிஸ்தான் 5.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது ஹாரிஸ் 20 பந்தில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். அடுத்து கேப்டன் சல்மான் ஆகா களம் இறங்கினார். பாகிஸ்தான் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.
ஹசன் நவாஸ், சல்மான் ஆகா ஜோடியும் அற்புதமாக விளையாடியது. 8.1 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைக் கடந்தது. ஹசன் நவாஸ் 26 பந்தில் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் 12.2 ஓவரில் 150 ரன்னையும், 15.5 ஓவரில் 200 ரன்னையும் கடந்தது. இதற்கிடையே சல்மான் ஆகா 30 பந்தில் அரைசதம் விளாசினார்.
15 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஹசன் நவாஸ் சதம் அடித்தார். 44 பந்தில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹசன் நவாஸ் 45 பந்தில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தும், சல்மான் ஆகா 31 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் (4 ஓவர்) 54 ரன்களும், பென் சியர்ஸ் (4 ஓவர்) 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ஜேக்கப் டஃபி 3 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பிரேஸ்வெல் 2 ஓவரில் 23 ரன்களும், இஷ் சோதி 2 ஓவில் 28 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.