search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    ஐபிஎல் 2025: சர்வதேச நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி- ஓர் பார்வை...
    X

    ஐபிஎல் 2025: சர்வதேச நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி- ஓர் பார்வை...

    • சான்ட்னெர், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என 4 சர்வதேச கேப்டன்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • பும்ரா தொடக்க போட்டிகளில் விளையாடாதது அந்த அணிக்கு கடும் சவாலானதாக இருக்கும்.

    ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் சர்வதேச போட்டியில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    அணி வீரர்கள் விவரம்:-

    பேட்ஸ்மேன்கள்

    ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கெல்டன், ஸ்ரீஜித் கிருஷ்ணன், பெவன்-ஜான் ஜேக்கப்ஸ், திலக் வர்மா.

    ஆல்-ரவுண்டர்கள்

    ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், வில் ஜேக்ஸ், மிட்சல் சான்ட்னெர், ராஜ் அங்காட் பவா, விக்னேஷ் புதுர், கார்பின் போஸ்ச்.

    பந்து வீச்சாளர்கள்

    டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அர்ஜுன் தெண்டுல்கர், பும்ரா, வெங்கட சத்யநாராயன பென்மெட்சா, கரண் சர்மா, அஷ்வினி குமார், முஜீப் உர் ரஹ்மான்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    ரோகித் சர்மா, ரியன் ரிக்கெல்டன் ஆகிய இரண்டு முக்கிய தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. ரோகித் சர்மா உடன் இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரியான் ரிக்கெல்டன் களம் இறங்குவது சாதகமாக இருக்கும் என அணி நிர்வாகம் கருதும்.

    சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ரிக்கெல்டன் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். ரோகித் சர்மா இறுதிப் போட்டியில் அரைசதம் விளாசினார். வலது இடது காம்பினேசனை கருத்தில் கொண்டு இருவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிக்காததால், கடந்த காலங்களில் ரோகித் சர்மா பின்வரிசையில் களம் இறங்கியுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் திலக் வர்மா தொடக்க வீரராக களம் இறங்கப்பட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இல்லையெனில் புதிய வீரர்களில் ஒருவரை முயற்சி செய்து பார்க்கலாம்.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

    திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வில் ஜேக்ஸ் போன்றோர் உள்ளனர். திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஃபார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக கடந்த சில போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடியது இல்லை. இந்த ஐபிஎல் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள்.

    வேகப்பந்து வீச்சாளர்கள்

    பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீசே டாப்ளே, அஷ்வினி குமார், வெங்கட சத்யநாராயண பென்மெட்சா, அர்ஜூன் தெண்டுல்கர், கார்பின் போஸ்ச் (ஆல்ரவுண்டர்) என நீண்ட வேகப்பந்து வீச்சாளர் பட்டியலை கொண்டுள்ளது. பும்ரா தொடக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அந்த அணிக்கு சற்று சவாலானதாக இருக்கும்.

    புதுப்பந்தில் டிரென்ட் போல்ட், தீபக் சாஹர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். புதுப் பந்தை சிறந்த முறையில் ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர்கள் என்பதால் பவர் பிளேயில் ரன் கொடுப்பதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் உள்ளார்.

    ஒருவேளை தீபக் சாஹர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அஷ்வினி குமார், அல்லது வெங்கட சத்ய நாராயண பென்அட்சாவை பயன்படுத்தலாம்.

    சுழற்பந்து வீச்சாளர்கள்

    கரண் சர்மா, மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் என மூன்று பேர் உள்ளனர். மிட்செல் சான்ட்னெர், முஜீப் உர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் அசத்தி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களுடன் இவர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் கொடுப்பார்கள்.

    வெளிநாட்டு வீரர்கள்

    ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்), பெவன்-ஜான் ஜேக்கப்ஸ் (பேட்ஸ்மேன்), வில் ஜேக்ஸ் (ஆல்ரவுண்டர்), மிட்செல் சான்ட்னெர், கார்பின் போஸ்ச், டிரென்ட் போல்ட், ரீசே டாப்ளே, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

    இவர்களில் 4 பேரை மட்டுமே ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியும். 3 பேரை சேர்த்தால் இம்பேக்ட் வீரராக மற்றொருவர் களம் இறங்கலாம். இவர்களை ஹர்திக் பாண்ட்யா எப்படி கையாள்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

    ரிக்கெல்டன், முஜீப் உர் ரஹ்மான், டிரென்ட் போல்ட், சான்ட்னெர் ஆகியோரை தேர்வு செய்தால் வில் ஜேக்ஸ் விளையாட முடியாது. முஜீப் உர் ஹர்மான், சான்ட்செர் ஆகியோரில் ஒருவர் மட்டும் ஆடும் லெவனில் இறக்கப்பட்டால், இம்பேக்ட் வீரரான வில் ஜேக்ஸ்-ஐ பயன்படுத்த முடியும். இவர் பகுதி நேரமாக சுழற்பந்தும் வீசக் கூடியவர்.

    ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர்தான் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய முடியும். எப்படி இருந்தாலும் ஏராளமான சர்வதேச கேப்டன் என நட்சத்திர பட்டாளங்களை கொண்டு அணியாக வளம் வரும் என்பதில் சந்தேகமில்லை.

    Next Story
    ×