என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஷர்துல் தாகூர் அபாரம்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்க்கு 191 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
- ஷர்துல் தாகூர் அடுத்தடுத்து பந்தில் விக்கெட் வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
- டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார்.
ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஐதராபாத் 2.2 ஓவரில் 15 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்கோர் 7.3 ஓவரில் 76 ரன்னாக இருக்கும்போது டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை பிரின்ஸ் யாதவ் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய கிளாசனும் அதிரடியாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக 17 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் ரெட்டி 32 பந்தில் வெளியேறினார். இவரை ரவி பிஷ்னோய் க்ளீன் போல்டாக்கினார்.
இதனால் 14.1 ஓவரில் 128 ரன்கள் அடிப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 200 ரன்னைத் தொடுவது சந்தேகமானது. ஆனால் அனிகெட் வர்மா 13 பந்தில் 36 ரன்களும், பேட் கம்மின்ஸ் 4 பந்தில் 18 ரன்களும் அடித்தனர். என்றபோதிலும், பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்கும்போது 17.3 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.
இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ பேட்டிங் செய்து வருகிறது.