என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தற்காலிகமான பிட்ச் சவாலாக இருக்கும்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு.. மேத்யூ ஹைடன் கணிப்பு
- ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும்.
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2024 -25 பார்டர் -கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. அத்தொடரில் இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றிகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இம்முறை என்ன தான் இந்தியா போராடினாலும் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் சொல்வேன். அதே சமயம் வெற்றிக்காக இந்திய அணி சவால் கொடுக்கும் என்றும் நான் சொல்வேன். தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பதியப்பட்ட பிட்ச்கள் (ட்ராப் இன்) இருக்கின்றன. அது முந்தைய இயற்கையான பிட்ச்களை விட சவாலாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும். அங்கே 3, 5-வது போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கே வித்தியாசமான கலவையுடன் விளையாட நேரிடலாம். அப்படி மாறுபட்ட பிட்ச் சூழ்நிலைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் அதிக சாதகம் இருக்கும் என்று நான் கருதவில்லை.
என ஹைடன் கூறினார்.