search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

    • பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது டெஸ்டாகும்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆன பிறகு பெர்த் டெஸ்டில் பெற்ற வெற்றி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவனுக்கு எதிரான பகல்-இரவு பயிற்சி ஆட்டத்திலும் வென்று இருந்தது.

    முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் அவருடன் தொடக்க வீரராக ஜெய்ஷ்வால் ஆடுவார். கே.எல்.ராகுல் 3-வது வரிசையில் களம் இறங்குவார். தேவ்தத் படிக்கல் கழற்றி விடப்படுவார்.

    பெர்த் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ஜெய்ஷவால்-ராகுல் ஜோடியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.

    துருவ் ஜிரல் நீக்கப்பட்டால் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும். அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் சுழற்பந்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் இடம் பெற்றார். இதே நிலை 2-வது டெஸ்டிலும் நீடிக்குமா? என்று தெரியவில்லை.

    முதல் டெஸ்டில் ஜெய்ஷ்வால் (161 ரன்) விராட் கோலி சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் பும்ரா (8 விக்கெட்), முகமது சிராஜ் (5), ஹர்சிக் ரானா (4) சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டு 2-வது இன்னிங்சில் அபாரமாக ஆடி இந்தியா பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாகும்.

    பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 108 போட்டியில் இந்தியா 33-ல், ஆஸ்திரேலியா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 29 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

    நாளை டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×