என் மலர்
விளையாட்டு

2036 ஒலிம்பிக்கை நடத்த இந்தியா தயாராக உள்ளது: தேசிய விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் அமித் ஷா உறுதி

- விளையாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும்.
- 2036 ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்றார்.
மேலும், மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது. இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
2014-ல் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது ஆரம்கால கட்டத்திலேயே உள்ளது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.