என் மலர்
விளையாட்டு
இந்திய ஜெர்சியில் பாகிஸ்தானா? அதெல்லாம் முடியாதுங்க.. பி.சி.சி.ஐ. திட்டவட்டம்
- இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
- தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இந்திய அணியின் ஜெர்சியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்ததாக கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பி.சி.சி.ஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவருகிறது, இது விளையாட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை (பாகிஸ்தானுக்கு) அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இதை அனுமதிக்காது, பாகிஸ்தானை ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தத் தொடர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.