என் மலர்
விளையாட்டு

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் குஜராத்- பெங்களூரு அணிகள் மோதல்

- 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
வதோதரா:
பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.
இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை நடக்கும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் மோதி அதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.
பெங்களூரு (கர்நாடகா), லக்னோ (உத்தரபிரதேசம்), மும்பை (மராட்டியம்), வதோதரா (குஜராத்) ஆகிய நகரங்களில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் பெற்றுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு அணியும் சில வீராங்கனைகளை கழற்றி விட்டு, புதிய வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்து பட்டை தீட்டியுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் இளம் விக்கெட் கீப்பர் கமலினியை ரூ.1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ட்ராகர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அவருக்கு பதிலாக ஜூனியர் உலகக்கோப்பையில் கலக்கிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பருனிகா சிசோடியாவை ரூ.10 லட்சத்துக்கு மும்பை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதே சமயம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சதம் உள்பட 309 ரன்கள் சேர்த்து தொடர்நாயகியாக ஜொலித்த கோங்காடி திரிஷாவை ஏலத்தில் யாரும் சீண்டவில்லை. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக ஏலம் நடந்ததால் திரிஷாவின் திறமையை யாரும் அறிந்திருக்கவில்லை. எந்த வீராங்கனையாவது காயமடைந்ததால் அவருக்கு பதிலாக திரிஷாவை இழுக்க வாய்ப்புள்ளது.
மற்றபடி டெல்லி அணியில் கேப்டன் மெக்லானிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அலிஸ் கேப்சி, அனபெல் சுதர்லாண்ட், மரிஜானே காப், அருந்ததி ரெட்டி, குஜராத் அணியில் ஹர்லீன் தியோல், பெத் மூனி, லாரா வோல்வார்ட், கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர், டியான்ட்ரா டோட்டின், தனுஜா கன்வார், மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, அமெலியா கெர், நாட் சிவெர், நடினே டி கிளெர்க், சாய்கா இஷாக், பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி, டேனி வியாட், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பட்டீல், ஜார்ஜியா வேர்ஹாம், உ.பி. அணியில் கேப்டன் தீப்தி ஷர்மா, சமாரி அட்டப்பட்டு, தாலியா மெக்ராத், சினெலி ஹென்றி, சோபி எக்லெஸ்டோன், ராஜேஸ்வரி கெய்க்வாட் என எல்லா அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. அதனால் யார் கை ஓங்கும், எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதை இப்போதே கணிப்பது கடினம். இருப்பினும் மும்பை, பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு சற்று தூக்கலாக தெரிகிறது.
போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது. அதே பரிசுத்தொகையே இந்த முறையும் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இந்த முறை நிறைய உள்நாட்டு வீராங்கனைகள் இந்த போட்டிக்கு தயாராகி வருவது இந்திய பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் உற்சாகம் அளிக்கிறது. சர்வதேச வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்ைப பெற்றுள்ள அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இதன் மூலம் இந்திய அணி வலுவடையும்' என்று குறிப்பிட்டார்.
வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. பெங்களூரு ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.