search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லப்போவது யார்?- இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி இன்று மோதல்
    X

    மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லப்போவது யார்?- இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி இன்று மோதல்

    • 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது.
    • மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது.

    லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடமும், உ.பி.வாரியர்ஸ் கடைசி இடமும் பெற்று நடையை கட்டின. நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

    2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைத்துள்ளது. அந்த அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாட் சிவெர் (493 ரன்கள், 9 விக்கெட்), அதிக விக்கெட் வீழ்த்தியதில் முதலிடத்தில் இருக்கும் ஹெய்லி மேத்யூஸ் (17 விக்கெட், 304 ரன்) ஆகியோர் ஆல்-ரவுண்டராக அசத்தி மும்பை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் அமெலியா கெர் (16 விக்கெட்), ஷப்னிம் இஸ்மாயிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'ஒரே மைதானத்தில் ஒரே ஆடுகளத்தில் தான் இறுதிப்போட்டியையும் விளையாடப் போகிறோம். கடந்த 4 நாட்களில் இங்கு 3 ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். இதனால் நிறைய விஷயங்களை புரிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக இங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மையை நன்கு அறிந்துள்ளோம். இதை எங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கிறேன்' என்றார்.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 2 தடவையும் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 3-வது முயற்சியிலாவது கோப்பை ஏக்கத்தை தணிக்குமா? என்ற ஆவல் எழுந்துள்ளது.

    டெல்லி அணி பந்து வீச்சையே அதிகம் நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் ஷபாலி வர்மா (300 ரன்), மெக் லானிங்கும் (263 ரன்), பந்து வீச்சில் ஷிகா பாண்டே, அனபெல் சுதர்லாண்ட், மின்னு மணியும் நல்ல நிலையில் உள்ளனர். ஜோனஸ்சென் (137 ரன், 11 விக்கெட்) ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஜானே காப் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அவர்களும் பார்முக்கு திரும்பினால், டெல்லி இன்னும் வலிமை அடையும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அதில் மும்பை 3 ஆட்டங்களிலும், டெல்லி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு தொடரில் 2 ஆட்டங்களிலும் டெல்லி அணி வெற்றியை ருசித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் நேரில் வந்து உற்சாகப்படுத்துவதால் வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், கமலினி, சன்ஸ்கீர்த்தி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெஸ் ஜோனஸ்சென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சுதர்லாண்ட், சாரா பிரைசி, நிக்கி பிரசாத், ஷிகா பாண்டே, மின்னு மணி, திதாஸ் சாது.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×