என் மலர்
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள 12 பழைய விமானங்கள் அகற்றம்

- சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தன.
- விமானங்கள் புறப்படும் போதும், தரை இறங்கும்போதும், பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு, என்.இ.பி.சி., கிங்பிஷர், ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களை சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை. செயல்பாட்டில் இல்லாத டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் விமான நிறுவனங்களின் விமானங்கள் எதுவும் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை.
ஆனால் என்.இ.பி.சி., கிங்பிஷா், ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், சென்னை விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில், 4 என்.இ.பி.சி., விமானங்கள், ஒருஜெட் ஏர்வேஸ் விமானம் ஆகிய விமானங்கள், கடந்த 2021-ம் ஆண்டில், முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு, அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்தன.
இந்த விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும்போது சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் பணிகள் நடந்தன.
கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 விமானங்களில், 2 விமானங்களை அப்புறப்படுத்தும் பணி, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
அதில், பயன்படுத்தும் நிலையில் இருக்கும், என்ஜின்கள் உட்பட, தொழில் நுட்ப கருவிகள், முக்கியமான பாகங்கள் தனியே பிரித்து எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது, மீதி உள்ள பழைய விமானங்களையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை அந்த விமான நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
அதன்படி முதல் கட்ட மாக நிறுத்தப்பட்டு உள்ள பழைய விமானங்களின் மதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் மதிப்புகள் கணக்கிட்ட பின்பு, அவற்றை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும் என்று தெரிகிறது. விமானங்களின் என்ஜின்கள் மற்றும் முக்கிய உதிரி பாகங்கள் பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் இருக்கும் பாகங்கள், அனைத்தும் தனியாக எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட இருக்கிறது.
இந்த பழைய விமானங்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக, 2012-ம் ஆண்டு முதல், தற்போது வரையிலான விமான நிறுத்தக்கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இதனால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் மொத்தமாக கிடைக்கும்.
இது தவிர, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தன. இப்போது இந்த விமானங்கள் அகற்றப்படுவதால், மற்ற விமானங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இட வசதிகள் கிடைக்கும்.
இந்த பழைய விமானங்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடா்ந்து நிறுத்தப்பட்டிருந்ததால் அதில் பல்வேறு வகையான பறவைகள், அந்த விமானங்களுக்குள் கூடுகட்டி வசித்து இனவிருத்தி செய்து வந்தன.
இதனால் விமானங்கள் புறப்படும் போதும், தரை இறங்கும்போதும், பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. தற்போது இந்த விமானங்கள் அகற்றப்பட உள்ளதால் இனிமேல் பறவைகளால் விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.