என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி- கணவர் கைது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி- கணவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/01/19/1823500-2.webp)
கைதான அருண்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி- கணவர் கைது
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பினர்.
- அருண் மற்றும் ஹேமலதா தம்பதியினர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவை:
கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 33). இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்து முடித்துள்ளார். தற்போது கோவையில் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சந்திரமோகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முயற்சி செய்தார். அப்போது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பு வந்தது. இதை நம்பி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை அவர் அணுகினார்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான அருண் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் இருந்தனர். சந்திரமோகனிடம் போலந்து நாட்டில் வேலை உள்ளதாகவும், அங்கு செல்ல ரூ.4 லட்சம் வரை செலவாகும் எனவும் அவர்கள் கூறினர். மேலும் முன் பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், பணியாணை வந்த பிறகு மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்திரமோகன் இரண்டு தவணைகளாக ரூ.1 லட்சம் பணத்தை அருண் மற்றும் ஹேமலதா தம்பதியிடம் வழங்கினார். பின்னர் அவர்களிடம் வேலைக்கான பணியாணை குறித்து கேட்ட போது விரைவில் அழைப்பு வரும் என கூறி வந்தனர்.
கடந்த ஓராண்டாக நேரில் சென்றும் முறையான பதில் அளிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்ற சந்திரமோகன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்க மறுத்த அருண் தம்பதியினர், சந்திரமோகனை மிரட்டி வெளியே அனுப்பினர்.
இதுகுறித்து சந்திரமோகன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அருண் மற்றும் ஹேமலதா தம்பதியினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடியில் ஈடுபட்ட அருணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது மனைவி ஹேமலதா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் இந்த தம்பதியினர் சந்திரமோகனை போல பலரை ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. இதில் கும்பகோணத்தை சேர்ந்த அமுதபிரியன் ரூ.1 லட்சம், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் ரூ.4.54 லட்சம், திருவள்ளூர் பொன்னேரியை சேர்ந்தவர் சரவணன் ரூ.1 லட்சம், முகமது ஜவகர் அலி ரூ.4.50 லட்சம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் ரூ.1 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த அகமது யாசர் ரூ.1 லட்சம், நாகர்கோவிலை சேர்ந்த பெஜாட்ச் ரூ.2 லட்சம் அரியலூர் புகழேந்தி மற்றும் கார்த்தீஸ்வரன் ஆகியோர் ரூ. 3.18 லட்சம் என மொத்தம் ரூ.19.22 லட்சம் பணத்தை பெற்று இந்த தம்பதியினர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.