search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நிலம் அபகரித்ததை கண்டித்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி
    X

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நிலம் அபகரித்ததை கண்டித்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

    • நில மோசடி புகாரில் அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கடந்த வாரமும் இதேபோல நில மோசடி புகார் தொடர்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்களுக்கு சொந்தமான ¾ செண்டு நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் கோவில் கட்டுவதற்கு நிலம் தேவை என எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த நிலத்திற்கு இழப்பீட்டு தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று விஜயன், காளியம்மாள், அவரது மகள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென தங்கள் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை கூறினர். இதனையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துச் செல்லுமாறு தெரிவித்தனர்.

    திண்டுக்கல் மக்கான்தெருவை சேர்ந்த தாதர்மைதீன் மகன் சையது இப்ராகிம். இவரது மனைவி ரசீதாபேகம். இவர்களுக்கு அரசு சார்பில் 1 ஏக்கர் 26 செண்டு நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை பித்தளைப்பட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவர் அபகரித்துக் கொண்டார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என சையது இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் நடந்த விவரங்களை தெரிவித்தனர். நில மோசடி புகாரில் அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரமும் இதேபோல நில மோசடி புகார் தொடர்பாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×