என் மலர்
தமிழ்நாடு
பிரபல நடிகை வீட்டில் திருடிய வேலைக்கார பெண் உள்பட 2 பேர் கைது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
- தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பர் அதுல்யா ரவி.
இவரது சொந்த ஊர் கோவை ஆகும். வடவள்ளி அவுத்தி மருத்துவமனை மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போனது.
அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி(46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.