search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் நகைக்கடை உரிமையாளரிடம் 4 கிலோ நகை கொள்ளை: பெண் உள்பட 2 பேர் சிக்கினர்
    X

    தர்மபுரியில் நகைக்கடை உரிமையாளரிடம் 4 கிலோ நகை கொள்ளை: பெண் உள்பட 2 பேர் சிக்கினர்

    தர்மபுரியில் நகைக்கடை உரிமையாளரிடம் 4 கிலோ நகை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி துரைசாமி நாயுடு தெருவில் வசித்து வருபவர்கள் கோபி (வயது40), சிவக்குமார் (41). உறவினர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் ஒரு நகைக்கடையை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நகைக்கடையில் நகைகளை இரவில் வைத்தால் கொள்ளை போய் விடுமோ? என்ற அச்சத்தில் தினமும் இவர்கள் நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விடுவது வழக்கம்.

    அதன்படி நேற்றிரவு வியாபாரத்தை முடித்ததும் கோபி மற்றும் சிவக்குமார் ஆகிய 2 பேரும் முதலில் 4 கிலோ நகைகளை எடுத்து வீட்டில் கொண்டு வைத்தனர். பின்னர் கடையை பூட்டிய அவர்கள் கடையில் மீதி இருந்த 3.950 கி.கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப்பணத்தையும் எடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.

    கடையில் இருந்து 100 அடி தூரத்தில் 2 பேரும் சென்று கொண்டிருந்த போது அங்கு ஒரு பெண் உள்பட 4 பேர் கும்பல் திடீரென வந்தது.

    பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கோபி, சிவக்குமார் ஆகிய 2 பேரின் முகத்திலும் மிளகாய் பொடியை தூவியது. இதில் 2 பேரும் நிலைகுலைந்தனர்.

    அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த கும்பல் கோபியின் கையில் இருந்த 3.950 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் பறித்து விட்டு தப்பியோட முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்து கோபி, சிவக்குமார் ஆகிய 2 பேரும் திருடன்...திருடன்... என்று சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அங்கு திரண்ட அந்த பகுதியினர் நகைகளை பறித்து விட்டு தப்பிய ஸ்டாலின் என்பவரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

    இதற்கிடையே தர்மபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பொது மக்களிடம் பிடிபட்ட ஸ்டாலினை மீட்டு அவரிடம் விசாரணை தீவிர நடத்தினர், அப்போது நகைகளை பறித்து சென்ற சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி அவரது மனைவி சாலம்மாள், மூர்த்தியின் மகன் முல்லை வேந்தன் மற்றும் சேட்டு ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிய மூர்த்தி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மூர்த்தி கோபியின் சகோதரி மகனான செந்தில் என்பவருக்கும் வட்டிக்கு பல லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை செந்தில் திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி தினமும் கடையில் இருந்து வீட்டுக்கு நகைகளை கோபி எடுத்து செல்வதை பார்த்தார். அந்த நகைகளை பறித்து வைத்து கொண்டால் உறவினரான செந்திலிடம் பணத்தை கோபி வாங்கி தருவார் என்று நினைத்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சாலம்மாள் போலீசாரிடம் சிக்கினார். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தி, முல்லை வேந்தன், சேட்டு ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்றிரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×