search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரியான நேரத்தில் மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறதா?
    X

    சரியான நேரத்தில் மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறதா?

    மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் இந்த பணியில் தொய்வு ஏற்படும்.
    தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும், பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையிலும் 1934-ம் ஆண்டு 120 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் மேட்டூர் அணை கட்டப்பட்டது.

    தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களின் பாசனம், மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இதுவரை தூர் வாரப்படவில்லை. அணையில், வெள்ளப்பெருக்கு மற்றும் மழையால் 20 சதவீதம் வரை வண்டல் மணலும், சேறும் படிந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளளவு குறைந்து உள்ளது.



    இந்த நிலையில் மேட்டூர் அணை தூர்வார முடிவு செய்யப்பட்டு, அணையில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

    மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் இந்த பணியில் தொய்வு ஏற்படும். இதனால் பலன் கிடைக்காது. தற்போது குறுவைக்கு தண்ணீரை எதிர்பார்த்து விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்ட கருத்து:-

    மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வருகிறோம். அணை கட்டப்பட்ட நாளில் இருந்து அதன் கொள்ளளவை விரிவாக்கம் செய்வதற்கோ, அணையை பராமரிக்கவோ நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

    மேட்டூர் அணை தூர்வாருவதற்கு திட்டம் தீட்டி, கடந்த ஜனவரி மாதம் தூர்வாரி இருக்க வேண்டும். காலம் கடந்து மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து இருப்பது எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்காது. காரணம் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தான் பெய்யும். அது முன்னதாக மே 15-ந்தேதியே தொடங்கி விட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்யும் மழைநீரும் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கி விட்டது.

    தூர்வாரும் பணியால் தண்ணீர் வரத்து தடைப்பட்டு பாசனம் தடைப்படுமோ? தண்ணீரின் சேமிப்புக்கு பாதகம் ஏற்படுமோ என்ற அச்சமும், சந்தேகமும் எழுகிறது.

    இது ஒரு புறமிருக்க, கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையை தவிர்த்து மற்றநீர் தேக்கங்களில் சட்டத்துக்கு புறம்பாக தண்ணீரை முழுமையாக தேக்கி வைத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு தான் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பல முறை உத்தரவிட்டது. இதை நம்பி விவசாயிகள் குறுவைக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். வருகிற ஜூன் 12-ந்தேதி காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தஞ்சையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை தொடர் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி உள்ளேன்.

    இந்தநிலையில் போராட்டத்தை திசை திருப்பும் விதமாகவும், கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு அடி பணிந்தும், தூர்வாரும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறாரோ என்ற சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை தூர்வாரும் திட்டத்தை வரவேற்கிறோம். தண்ணீரை சேமிப்பதற்கோ மேட்டூர் அணை திறப்பை காலதாமதப்படுத்துவதற்கோ குறுவைக்கு தண்ணீரை பெற்று அதை உறுதியாக்குவதற்கோ அது தடையாக அமையக்கூடாது.

    தூர்வாரும் பணியை அவசர கதியில் தொடங்கி விட்டு பின்னர் தண்ணீர் நிரம்பியதாக காரணம் காட்டி, அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஊழல் முறைகேடுகளுக்கு இடமளித்து விடக்கூடாது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.

    இந்த ஆண்டு தண்ணீர் கிடைக்காவிட்டால் காவிரி டெல்டா மாவட்டத்தை நம்பி இருக்கும் விவசாயிகள், அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்படும். அதிர்ச்சி மரணங்கள் கூடுதலாகும். காவிரி நீர் இல்லை என்றால் விவசாயிகளுக்கு வாழ்க்கை இல்லை. இதை அரசியல் பார்வையுடன் அணுகுவது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கதல்ல. யதார்த்த உணர்வுடன் அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    -செந்தூர் திருமாலன்
    Next Story
    ×