search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து சிறுமிகள் பலி: 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்
    X

    அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து சிறுமிகள் பலி: 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

    சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து இரண்டு சிறுமிகள் பலியான சம்பவத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன.

    மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்த கம்பியை தெரியாமல் மிதித்தனர். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், இறந்த சிறுமிகளின் பெயர் மகா (9) மற்றும் பாவனா (8) என்று தெரிவித்துள்ளனர்.

    மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆர்.ஆர். நகர் பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், பலியான சிறுமிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த மின் துறை அமைச்சர் தங்கமனி இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். விசாரணையின் முடிவில், வியாசர்பாடி மின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    Next Story
    ×