search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1½ ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு
    X

    1½ ஆண்டுகளுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு

    முல்லைப் பெரியாறு அணையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மூவர் குழு வரும் 14-ந் தேதி ஆய்வு செய்கின்றனர்.
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அணை மராமத்து மற்றும் கண்காணிப்பு பணிக்காக உச்சநீதிமன்ற உத்தரவின் படி மூவர் குழு அமைக்கப்பட்டது.

    இக்குழுவின் தலைவராக மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நாதன் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனையடுத்து மத்திய நீர் வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே.பிள்ளை புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

    இக்குழுவில் தமிழக மற்றும் கேரள அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். பி.ஆர்.கே பிள்ளை தலைமையில் கடந்த ஆண்டு ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அவரும் பணி ஓய்வு பெற்றார்.

    மூவர் குழுவின் புதிய தலைவராக மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குன்சன்ராஜ் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதே போல் தமிழக பிரதிநிதியாக இருந்த பழனியப்பனுக்கு பதிலாக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

    கேரள பிரதிநிதியாக இருந்த அம்மாநில நீர் பாசன துறை கூடுதல் செயலர் குரியன் மாற்றப்பட்டு கேரள நீர் வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஜ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு 1½ ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் வரும் 14-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்.

    முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வுக்கு முன்பாக 5 பேர் கொண்ட துணைக்குழு ஆய்வு செய்வது வழக்கம். ஆனால் கடந்த மாதம் துணைக்குழு ஆய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மூவர் குழு ஆய்வுக்கு வருகை தருவதால் பெரியாறு அணையில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக தமிழக அரசு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2 நாட்களாக அணை பகுதியில் வர்ணம் பூசுதல், ‌ஷட்டரில் பிளேட் பொருத்துதல், பேபி அணையில் இருந்து பெரியாறு அணை வரை கல் பதித்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. மேலும் கட்டுமானப் பொருட்களையும் வல்லக்கடவு வழியாக கொண்டு செல்ல கேரள வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்காததால் தமிழக பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் மராமத்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×