என் மலர்
செய்திகள்
புதுக்கோட்டை உள்பட 4 மாவட்டங்களில் 3-வது நாளாக பஸ் ஸ்டிரைக் நீடிப்பு
புதுக்கோட்டை:
ஊதிய உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை,கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் பெரும்பாலான பஸ்கள் இன்றும் இயக்கப் படவில்லை.
புதுக்கோட்டை மண்டலத்தில் மொத்தம் 9 பணிமனைகள் உள்ளது. இங்கிருந்து 438 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2800 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்டிரைக் காரணமாக 90 சதவீத பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்காலிக டிரைவர்கள் - கண்டக்டர்கள் நியமிக்கப் பட்டதையடுத்து இன்று காலை 25 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பணி மனைகளில் இருந்து மொத்தம் 80 பஸ்கள் வெளியே சென்றன.
மற்ற பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று மாலைக்குள் இயக்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டத்தில் பணிமனைகள் உள்ளது. இதில் அரியலூர் பணிமனையில் உள்ள 96 பஸ்களில் இன்று காலை 17 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் பணிமனையில் உள்ள 98 பஸ்களில் 29 பஸ்கள் இயக்கப்பட்டன.
அரியலூர் பணிமனையில் தினமும் ரூ.8 லட்சம் வசூல் ஆகும். ஆனால் நேற்று ரூ. 1.75 மட்டுமே வசூலானது. ஜெயங்கொண்டம் பணிமனையில் தினமும் 9 லட்சம் வசூல் ஆகும் ஆனால் நேற்று ரூ.4.5 லட்சம் மட்டுமே வசூலானது.
கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 3 பணி மனைகள் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சியில் என மொத்தம் 5 பணிமனைகள் உள்ளது. இந்த பணி மனைகளில் இருந்து 240 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி 130 பஸ்கள் இயக்கப்பட்டன. 9 மணி ஆகியதும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரம்பலூர் துறை மங்கலம் பணி மனையில் மொத்தம் 105 பஸ்கள் உள்ள நிலையில் இன்று காலை 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
பஸ்கள் இயக்கப்படாததன் காரணமாக புதுக்கோட்டை உள்பட 4 மாவட்டங்களிலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். #tamilnews