search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைதாப்பேட்டையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மேடையில் அனைத்துக்கட்சி தலைவர்கள்.
    X
    சைதாப்பேட்டையில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மேடையில் அனைத்துக்கட்சி தலைவர்கள்.

    தமிழக அரசியலில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேவை- திருமாவளவன்

    மதவாத சக்திகளை முறியடிக்க தமிழக அரசியல் களத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேவை என்று மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் திருமாவளவன் பேசினார்.
    சென்னை:

    தென்சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டையில் நடந்தது.

    அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    தி.மு.க. என்ற பேரியக்கத்தை முடித்து வைக்க பலர் கங்கணம் கட்டி அலைகிறார்கள். அண்ணாவின் அறிவு பூர்வமான தலைமையின் கீழும், எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்து இந்த இயக்கத்தை கட்டிக்காத்த கலைஞர் தலைமையின் கீழும், இப்போது பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆற்றல் மிக்க தலைமையை தி.மு.க. பெற்றுள்ளது. அதனால்தான் ஒழிக்க பார்க்கிறார்கள். அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

    அடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்து விடும் என்பதற்காக இப்போது தீவிரமாக எதிர்க்கிறார்கள்.

    இந்த மண்ணில் சமூக நீதியும், இட ஒதுக்கீடும் நிலைக்க தி.மு.க. பாதுகாக்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வராமலே சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். வந்தால் என்ன ஆகும்? தி.மு.க.வோடு கொள்கை முரண்பாடு இருந்தாலும் மதச்சார்பின்மை, மதவாதம் என்ற கோணத்தில் அணுக வேண்டும். எனவேதான் எல்லோரும் ஒரே அணியில் திரண்டு இருக்கிறோம்.

    வருகிற தேர்தலோடு தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் முற்றுப்புள்ளி வைக்க காய் நகர்த்துகிறார்கள். மதவாத சக்திகளை முறியடிக்க தமிழக அரசியல் களத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வேண்டும். அந்த உணர்வில் தான் போயஸ் தோட்டத்துக்கு சென்று வாழ்த்து கூறினோம்.

    மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட தி.மு.க. உயிர்ப்போடு இருக்க வேண்டும். சாதி, மத வெறியர்கள் தலை தூக்காமல் தடுக்க காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள், சிறுபான்மையினர் இணைந்து போராட வேண்டும்.

    இந்த அணி தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் கை கோர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு பேசும்போது, “தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பாதுகாக்க தி.மு.க. வலுவாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்” என்றார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் நடிப்பதை ரசிக்கலாம். ஆளும் தகுதி அவர்களுக்கு வருமா? ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று மக்களை ஏமாற்றி விட முடியாது” என்றார்.

    நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சுப.வீரபாண்டியன், பொன் குமார், ஈஸ்வரன், இனிகோ இருதயராஜ், வக்கீல் ஸ்ரீதரன், பொன்.ஜெய்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×