என் மலர்
செய்திகள்
பட்டாசு தொழிலை பாதுகாத்த அதிமுகவுக்கு வாக்களியுங்கள்- ராஜேந்திர பாலாஜி பிரசாரம்
சாத்தூர்:
சாத்தூர் தொகுதியில் வெம்பக்கோட்டை ஒன்றியம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மனுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெயலலிதா திட்டங்களான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களால் பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் இந்த கூட்டணி பெற்றிருக்கிறது.
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்று பயன் அடைந்து இருப்பார்கள்.
ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் ரூ.25,000 மானியத்துடன் ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்படுகிறது. ஆயிரம் ரூபாயுடன் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வாழங்கிய எடப்பாடியார் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நடவடிக்கை எடுத்ததால் இன்று அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தனி வழக்கறிஞரை வைத்து வாதாடியதால்தான் பட்டாசு வழக்கில் நமக்கு நல்ல தீர்ப்பு வந்துள்ளது.
சாத்தூர் தொகுதியில் தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்திட வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். விருதுநகர் எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க.விற்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார்.