என் மலர்
தமிழ்நாடு

வருகிற 24-ந்தேதி ஜல்லிக்கட்டு: ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்- கலெக்டர் தகவல்

- பிரமாண்ட மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.
- டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று 19-ந் தேதி மதியம் 12 மணி முதல் நாளை 20-ந்தி மதியம் 12.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள், காளையர்கள் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதற்கேற்றவாறு கீழக்கரை மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது.