என் மலர்
தமிழ்நாடு
40 ஆயிரம் ஏக்கர் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கியது- பஞ்சின் நிறம் மாறுவதால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்
- திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நன்னிலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர், நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் 75 லிருந்து 85 நாட்கள் ஆன பருத்தி பயிர் வயல்களில் மழைநீர் தேங்கி பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தி பயிரில் பூக்கள் வைத்து வந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள் பருத்தி வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பருத்தி பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடர் மழையின் காரணமாக பஞ்சு நிறம் மாறி வருவதாகவும் இதனால் பருத்தியின் தரம் குறைந்து குறைந்த விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கமலாபுரம், ஓகை ,பேரையூர், புனவாசல்,,பூந்தாழங்குடி, கீழ மணலி, மேல மணலி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கோட்டூர், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பருத்தி பயிரிட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட நிலையில் மழை நீரை வடிய வைத்து மீதமுள்ள பருத்திச் செடிகளையாவது காப்பாற்றி விடலாம் என்கிற முனைப்பில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பஞ்சு நிறம் மாறுவதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் பருத்தியின் தரம் குறைந்து விட்டதாக கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கும் நிலை ஏற்படும் எனவும் இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் பருத்தி பயிரை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.