என் மலர்
தமிழ்நாடு
திருவண்ணாமலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி 7 பேர் பலி
- தகவல் அறிந்த மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
- கடப்பாரை போன்ற கம்பிகளை கொண்டு காரை உடைத்து 7 பேர் உடல்களை மீட்டனர்.
செங்கம்:
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள டூம்கூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
காரில் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அந்தனூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்தது.
எதிர்பாராத விதமாக கார் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சின்னாபின்னமானார்கள்.
இந்த விபத்தில் காரில் இருந்த 2 சிறுவர்கள் ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் காருக்குள்ளேயே துடிதுடித்து இறந்தனர். ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.
இந்த கோர விபத்தை கண்ட வாகன ஓட்டிகள் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருபுறமும் இருந்து வந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காருக்குள் பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த பெண்ணை மீட்டனர். அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காருக்குள் மணிகண்டன் உள்பட 7 பேரும் உடல் சிதைந்த நிலையில் பிணமாக சிக்கி இருந்தனர். கடப்பாரை போன்ற கம்பிகளை கொண்டு காரை உடைத்து 7 பேர் உடல்களை மீட்டனர் .
மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
சுமார் 1½ மணி நேரம் மீட்பு பணிகள் நடந்தது. அதற்குப் பிறகு திருவண்ணாமலை பெங்களூர் சாலையில் போக்குவரத்து சீரானது.
பலியானவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவண்ணாமலையை நோக்கி விரைந்து வந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருக்கு அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.
இறந்தவர்கள் விவரம் வருமாறு;-
மணிகண்டன் (வயது42). ஹேமநாதன் (41). சின்னப்பா, மலர், சதீஷ்குமார், சர்வேஸ்வரன் (7), சித்தார்த் (3), இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.