search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றில் தடுப்பணை கட்டும்பணி 85 சதவீதம் முடிந்தது
    X

    கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை

    அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றில் தடுப்பணை கட்டும்பணி 85 சதவீதம் முடிந்தது

    • திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
    • வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது.

    இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

    இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் ஏற்கனவே அணைகள் உள்ளன. அதிக மழை பெய்யும்போது கூவம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக கடலில் கலந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில் மேலும் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் 3-வது தடுப்பணை ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

    இந்த தடுப்பணை கடந்த பிப்ரவரி மாதம் 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டும் பணி தொடங்கியது. தற்போது இதில் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முழுஅளவில் தயாராகி விடும் என்று தெரிகிறது.

    இந்த தடுப்பணையில் 50 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். எனவே வரும் பருவமழையின்போது இந்த தடுப்பணை வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் அப்பகுதியில் உள்ள 600 ஏக்கர் விவசாய நிலங்கள், நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்சாகுபடி, கால்நடைகள், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பயன்தரும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கூவம் ஆற்றின் குறுக்கே அதிகத்தூர் அருகே ரூ. 17.70 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பணை பயன்பாட்டுக்கு வரும்போது சுற்றி உள்ள கிராமங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு நிலத்தடி நீர் அதிகரிக்கும். தடுப்ணையில் தண்ணீர் தேங்கும்போது தற்போது 35 அடி ஆழத்தில் இருக்கும் நீர்மட்டம், 15 அடியாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    Next Story
    ×