என் மலர்
தமிழ்நாடு

ஆவின் பால் விலை உயர்வு- ஆரஞ்சு நிற பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பு

- பால் விலை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
- சில்லரை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு நிறம்) லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ஆக மாற்றி அமைக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை ஏற்றம் நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 3.11.2022 நாளிட்ட செய்திக்குறிப்பினை தொடர்ந்து, 5.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 32-லிருந்து, ரூ. 35 ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 41-லிருந்து ரூ. 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்ற மின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ. 46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லரை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு நிறம்) லிட்டர் ஒன்றுக்கு ரூ. 60 ஆக நாளை (5.11.2022) முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறை கொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு, சில்லரை விலையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 10 குறைவு.
உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லரை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடைகளில் ½ லிட்டர் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ரூ.24-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.