என் மலர்
தமிழ்நாடு
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் ரகளை
- நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை.
- தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
மதுரை:
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 75 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், 63 உதவியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.8 ஆயிரம் உயர்த்தி வழங்குவது, உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் ரூ.3 ஆயிரத்து 500 உயர்த்தி வழங்குவது மற்றும் டைட்டில் பார்க் அமைப்பதற்காக 5.60 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்திடம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ரூ.600 கோடியில் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுகையில், நான் தேர்ந்தெடுக்கப்பட்ட 80-வது வார்டில் மாநகராட்சி சார்பில் எந்த அடிப்படை வேலைகளும் நடைபெறவில்லை. இதுவரை 19 மாநகராட்சி கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையிலும், வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சித்திட்ட பணிகளும் நடைபெறாதது கவலையளிக்கிறது என்றார். பூமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. எனவே ஒரு வார்டுக்கு 5 தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் சாலை மற்றும் சாக்கடை பிரச்சினைகளை தீர்க்க ஒப்பந்தம் எடுப்பவர்கள் அதனை சரியாக செய்வதில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான் மக்களுக்கு சேவை செய்யத்தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் எந்த வேலையும் நடைபெறவில்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடும் நிலையில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தின்போது அவையில் அமர்ந்திருந்த எதிர்கட்சி தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த சோலைராஜா, லோயர்கேம்ப் குடிநீர் திட்டம் குறித்து மாநகராட்சி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மக்களுக்கு குடிநீர் முக்கியமானது. அதற்கான வேலைகள் குறித்து விபரமாக சொல்லுங்கள் என கூறினார்.
மேலும் எனது வார்டில் சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன் வைத்தார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கு பதிலளிடையாக அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. கவுன்சிலர்கள் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்று கோஷமிட்டனர். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சோலைராஜா மகன் இளவரசன், கவுன்சிலர்களை பார்த்து சில வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்களிடையே ரகளை ஏற்பட்டது.
உடனே இளவரசனை வெளியேற்றுமாறு மேயர் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டம் பரபரப்பாக இருந்தது.