என் மலர்
தமிழ்நாடு
ஆலங்குளம் வெடி விபத்து சம்பவம்: பறிமுதல் செய்யப்பட்ட டெட்டனேட்டர்களை செயலிழக்க செய்ய மதுரை குழு வருகை
- வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
- 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் என்பவருக்கு சொந்தமான இடம் புதுப்பட்டி-ராம்நகர் சாலையில் உள்ளது.
அங்கு கிணறு அமைக்க காளாத்திமடத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி நடந்து வந்தது. நேற்று சக்திவேல் மற்றும் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 22), ராஜலிங்கம் (56), அவரது மகன் மாரிச்செல்வம் (26), ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்த ஆசீர் சாலமோன் (27) ஆகிய 4 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.
பாறைகளை தகர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட டெட்டனேட்டர் எனப்படும் வெடிப்பொருட்களை சோதனை செய்தபோது, அவை திடீரென வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலிங்கம், ஆசீர் சாலமோன் ஆகியோர் சிகிச்சைக்கு சென்ற வழியில் இறந்தனர். மாரிச்செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடியை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அஜாக்கிரதையாக கையாண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 286, 304(2), 9-பி, 1-பி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அதேநேரத்தில் கிணறு தோண்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 84 டெட்டனேட்டர்களும், 86 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்க செய்வதற்காக மதுரையில் இருந்து குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் இன்ஸ்பெக்டர் சிங்கம் மேற்பார்வையில் கிணற்றுக்குள் வைத்து வெடிக்காமல் உள்ள 3 டெட்டனேட்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.