என் மலர்
தமிழ்நாடு
கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்
- ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.
- ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதைவிட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக்கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பசுமைத் தாயகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.