என் மலர்
தமிழ்நாடு
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி மோதல்.. இதுதான் காரணமா?
- அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
- பாஜக கட்சி கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழக பாஜக-வில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறின. கூடவே ஏராளமான சர்ச்சைகளும் உருவாகின.
மிகக் குறுகிய காலக்கட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பேற்ற காரணத்தால் உட்கட்சியிலேயே அண்ணாமலை சில சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது, தற்போது இது ஓரளவுக்கு குறைந்தும் இருக்கிறது.
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கட்சி சார்ந்த வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையிடையே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க தேவை என கருதி சில கருத்துக்களையும், அண்ணாமலை தொடர்ச்சியாக கூறி வந்தார்.
தமிழக அரசியலில் பிரதான எதிர்கட்சியாக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சிகளில் பாஜக தீவிரம் காட்டியது. இதோடு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்தது.
இதன் விளைவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை உருவாக்கிய அண்ணாமலை தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணி உருவாகவும் காரணமாக இருந்தார். இதே தேர்தலில் பாஜக போட்டியிட்ட பல தொகுதிகளில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்த நிலையில், இருகட்சியை சேர்ந்தவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன. இது ஒருக்கட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான நேரடி மோதலாக மாறத் துவங்கியது.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.
இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உருவபொம்மை எரிப்பு என அதி.மு.க.-வினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு, அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் மற்றும் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால் கடும் சொற்கள் கூடாது," என்று தெரிவித்தார்.
கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தார். அரசியல் களத்தில் தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் சாதாரண விஷயம் தான், ஆனால் தனிநபர் விமர்சனங்கள் வீண் பதற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.
சிலர், பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் விமர்சகர்களில் சிலர் இதுபோன்ற கருத்துக்கள் அரசியல் களத்தில் பாஜக - அதிமுக மோதல் போக்கை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும், எதிர்காலங்களில் இருகட்சிகளின் தேர்தல் கூட்டணிக்கு உதவும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
தமிழக பாஜக-வின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்புக் குரல் ஆகியோவை திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கூட்டணி உருவாகி வருவதை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், திமுக மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரு கட்சிகளின் அரசியல் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தனர்.
இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசிய விவகாரம், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் களம் வரை எதிரொலிக்கும் என்று தெரிகிறது. சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்ததை போன்று, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை தவிர்த்து பாஜக தலைமையிலான கூட்டணியை வலுப்பெற வழி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதிரடி முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் அண்ணாமலை, 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - பாஜக நேரடி மோதலை உருவாக்கும் வகையில் தான் மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் ஆதாயம் கருதி, தனிநபர் எதிர்ப்பு கருத்து வீண் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு தேவையற்ற குழப்பங்களை மட்டுமே உருவாக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எதிர்கட்சி தலைவரை கடும் சொற்களால் வசைபாடிய அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்தாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து, ஆளும்கட்சிக்கு எதிரான சண்டை தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.