search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் - அண்ணாமலை பேச்சு
    X

    கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் - அண்ணாமலை பேச்சு

    • கரூரில் நடந்த மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
    • கர்நாடகாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லக் கூடாது என கூறினார்.

    கரூர்:

    கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் கரூர் மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசியல் கெட்டு போய் இருக்கிறது என்றால் அதற்கும் மையப்புள்ளியாக கரூர் மாறியிருந்தது. ஓட்டுக்கு பணம் என்ற அவமானம் கரூரில் எப்போதும் இருந்தது. அதற்கு இங்குள்ள அரசியல் காரணம்.

    ஆன்மிகத்திற்கு பெயர் போன மண், தற்போது அரசியல்வாதிகளின் சில பேரின் கெட்ட செயலால் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஊராக கரூர் மாறியிருக்கிறது. இழந்த பெருமையை கரூர் திரும்ப எடுக்க வேண்டும். இதனால் தான் பா.ஜ.க. மாநாடு மாற்றத்திற்கான மாநாடு என பெயர் வைத்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்கிறார்கள். தற்போது கூட்டத்திற்கும் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் தி.மு.க. முழுவதுமாக அழியும் நேரம் வந்துவிட்டது. எங்கேயும் தி.மு.க.வின் அடிச்சுவடி தெரியாத இல்லாத கரூர் மாவட்டமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

    தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இந்த ஆண்டு காவிரி நீர் தமிழகத்திற்கு கிடையாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்க்கட்சி கூட்டத்திற்கு கர்நாடகாவிற்கு வரும் 11-ம் தேதி செல்வார் என பார்ப்போம். முதலமைச்சர் கர்நாடகாவிற்கு சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்குள் வரமாட்டார். வருவதற்கும் நாங்கள் விடமாட்டோம். தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கூறிய பிறகும், அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு தமிழ் இனத்தை அடமானம் வைத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக முதலமைச்சர் சென்றால் பா.ஜ.க. அதனை பார்த்துக்கொண்டு இருக்காது. கோட்டையை முற்றுகையிடுவது மட்டுமில்லை. நீங்கள் எப்படி கோட்டைக்குள் செல்கிறீர்கள் என பார்ப்போம். தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×